புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அஹமத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்ததாக உத்தரபிரதேச அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், தாருல் உலூம் தேவ்பந்தின் துணைவேந்தர், முப்தி அபுல் காசிம் நோமானியின் கூற்றுப்படி, இந்த நிறுவனம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் நிலையில், எந்த விதமான உதவிகளையும், நன்கொடைகளையும் அரசாங்கத்திடமிருந்து ஏற்கவில்லை. வாரியத்தில் பதிவு செய்யப்படாத போதிலும், தாருல் உலூம் இந்திய அரசியலமைப்பின் படி கல்விப் பணிகளை மேற்கொள்கிறது. தாருல் உலூமின் “ஷூரா சொசைட்டி” சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பின் உத்தரவாதத்தின்படி நிறுவனம் செயல்படுகிறது.
அந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் அல்லது மானியத்தையும் ஏற்காத வரையில், அந்த நிறுவனத்தைச் சட்டவிரோதமாக அறிவிக்கும் அரசின் செயல் சட்டவிரோதமானது மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு எதிரானது என வழ.ஷர்புதீன் தெரிவித்தார்.
1867 இல் நிறுவப்பட்ட தாருல் உலூம் தேவ்பந்த் சுதந்திரப் போராட்டத்தில் மத அறிஞர்களை அர்ப்பணிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. உத்தரபிரதேச அரசின் சட்ட விரோதமான என்கிற அறிவிப்பு மதரஸாவின் செயல்பாட்டைச் சீர்படுத்துவதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களின் சமயப் படிப்பை முடக்கும் நோக்கத்தில் உள்ளது.
ஆர்எஸ்எஸ் அதன் உருவாக்கத்தின் 100வது ஆண்டான 2025 க்குள் சாதிக்க இலக்கு வைக்கும் இந்துத்துவா ராஷ்டிரா கட்டமைப்பை நோக்கிய மற்றொரு நகர்வு இதுவாகும். ஆர்எஸ்எஸ். கொள்கையாளர் கோல்வால்கர் வரையறுத்தபடி, சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லீம்களின் உரிமைகளை சங்பரிவார் அரசாங்கம் படிப்படியாகப் பறித்து வருகிறது என தெரிவித்த வழ.ஷர்புதீன், இதுபோன்ற விவகாரங்களில் பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் மௌனம் மிகவும் கவலையளிக்கிறது என்றும், இந்த மௌனம் சங்க பரிவாரத்தின் அந்நிய முயற்சிகளை எளிதாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.