உபி: கடந்த ஏப்ரல் 25 அன்று, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகரில் உள்ள எட்வாவில் ரம்ஜான் ஸஹர் உணவு உண்ணும் நேரத்தில் தனது வீட்டைச் சுற்றியுள்ள வயலுக்குச் சென்றபோது, சோனி (24) என்ற சையதா காதுன், பிரேந்திர குமார் மற்றும் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரை போனில் அழைத்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்க கூடாது என்றும் கூறியதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண், குற்றம் சாட்டப்பட்டவரின் கணக்கில் இருந்து மெசஞ்சரில் உருது மொழியில் செய்திகளை அனுப்பியதாகக் பெண்ணின் குடும்பத்தார் கூறுகின்றனர்.
இதற்குப் பிறகு, அதே மெசஞ்சர் கணக்கு மூலமாக சையதா காதுனின் பல படங்கள் அனுப்பட்டுள்ளது. அந்த படங்களில் இருந்தே அந்த பெண் சித்திரவதை செய்யப்படுவதை உணர முடிவதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சையதா காதுனின் காலில் முறிவு ஏற்பட்ட படத்தையும் அனுப்பி உள்ளார். படத்தில் இருக்கும் பெண்ணின் அடையாளம் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டது.
சிக்கி தவிக்கும் சையதா காதுன் :
கடந்த வாரம், சையதா காதுன் தனது மூத்த சகோதரரான நஃபீஸை போனில் அழைத்து தன்னை காப்பாற்றுமாறு அழுது கண்ணீர் வடித்துள்ளார். “நான் பஞ்சாபில் இருக்கிறேன்,” என்று அவர் மிகவும் பயந்த குரலில் அழுது கொண்டே கூற, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது என அவரது இளைய சகோதரர் நசிம் தி வயர் இடம் கூறினார்.
போலீசாரின் விளக்கம்:
குற்றம் சாட்டப்பட்டவர் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக பெண்ணின் குடும்பத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர். “முன்னதாக அந்த பெண் சிறுமியாக இருந்தபோது அவனுடன் ஓடிவிட்டார், ஆனால் அவர்கள் இருவரும் நேபாள எல்லையில் பிடிபட்டனர். எனினும், குடும்பத்தினர் முறையான புகாரை பதிவு செய்யவில்லை, மேலும் இந்த விவகாரம் காவல்துறையின் தலையீடு இல்லாமல் பரஸ்பரம் தீர்க்கப்பட்டது என ” எட்வா காவல் நிலையப் பொறுப்பாளர் கூறினார்.
இது சாதாரண கடத்தல் வழக்குதானா என்று கேட்டபோது, அந்த போலீஸ் அதிகாரி, “அந்த நபர் பிணைத்தொகை எதையும் கேட்காததால் அதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. ஒருவேளை பெண்ணின் கைகள் மற்றும் வாய் துணியால்) கட்டப்பட்ட படங்களும், அவரது கால் முறிந்த படங்களும் குடும்பத்தை அச்சுறுத்துவதற்தாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம், இருப்பினும் அந்த படங்கள் அப்பெண்ணுடையதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை, ”என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் செய்திகள் அனுப்பப்பட்ட முகநூல் ஐடியை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 366 (கடத்தல், கடத்தல் அல்லது பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
குடும்பத்தாரின் பரிதாப நிலை:
உபி காவல்துறை அலட்சியமாக இருந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். “காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தலையீட்டிற்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய எங்களுக்கு பத்து நாட்கள் ஆனது. இந்த செய்திகள் எந்த ஐடியிலிருந்து அனுப்பப்படுகின்றன என்பதை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியும், ”என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் வசித்து வந்தனர். எந்த பிரச்சனையும் எங்களுக்குள் ஏற்பட்டதில்லை எனினும் ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டவர் எனது சகோதரியின் படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் எடிட் செய்து பதிவேற்றம் செய்ததற்காக அவருடன் எனது மூத்த சகோதரர் சண்டையிட்டார். அதை நினைவில் வைத்து கொண்டு தற்போது அவரது அழைப்பு ஒன்றில், அந்த சண்டையை குறிப்பிட்டு, ‘இப்போது உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’ என்று பிரேந்திர குமார் கூறியதாக நசீம் கூறுகிறார்.
உபி போலீசாரின் ‘காதல் விவகாரம்’ போன்ற கோணத்தை மறுத்த குடும்பத்தினர், “அவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) எங்கள் வீட் டு பெண்ணின் சிறைப்பிடிக்கப்பட்ட, கால் உடைந்த நிலையில் இருக்கும் படங்களை ஏன் அனுப்ப போகிறார்கள்? உதவிக்காக எங்களைத் தொடர்பு கொள்ளும் முகமாகவே சையதா அனுப்பி இருக்கலாம் என குடும்பத்தார் கூறுகின்றனர்.
சுமார் 20 நாட்கள் ஆகியும் சையதா இருக்கும் இடத்தை உபி போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
நன்றி : தி வயர் ஊடகம்.