உ.பியிலுள்ள ஃபரித்பூர் காஜி என்னும் ஊரைச் சேர்ந்த 7 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள விபரம்:
கடந்த மே 8 ஆம் தேதி கிட்டத்தட்ட நோன்பு திறக்கும் இஃப்தார் சமயத்தில் வந்த காவல்துறையினர் அவர்களை வசை பாடியதோடு, அவர்களது வீட்டுகளையும் தாக்கினார்கள். குறிப்பாக சமையல் பொருட்களை சேதப்படுத்தி, பாத்திரங்களை உடைத்து, மீதமிருந்த உணவுப் பொருட்களை சிதறடித்தனர். மேலும் அங்கிருந்த ஆண்களைத் தாக்கியதோடு, 3 பேர்களை கைது செய்து சில கி.மீ தூரத்திலுள்ள பிஜ்னோர் நகரிலுள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், என்ன காரணத்திற்காக, யாரைத் தேடி இந்த சோதனை நடத்தப்படுகிறது என அக்காவலர்கள் தெரிவிக்கவில்லை.
மறுநாள் காலை அக்கிராமத் தலைவர் இக்பால் என்பவர் காவல்நிலையம் சென்று காரணம் கேட்ட போது, ‘பசு ஒன்று அறுக்கப்பட்டதாகக் கிடைத்த சந்தேக தகவலின் அடிப்படையிலேயே அக்கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டதாக’ காவலர்கள் தெரிவித்துள்ளனர். பிறகு அவர் அம்மூவரையும் மீட்டு வந்தார். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிக்கையோ தாக்கல் செய்யப்படவில்லை.
மே 12 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவல்படி, ‘ பசுக் கடத்தல்காரர்கள் மற்றும் பசுவை அறுப்பவர்களுக்கு எதிரான 15 நாள் நடவடிக்கைக் காலத்தின் இறுதிப் பகுதியில் மேற்கு உ.பியில் கைது நடவடிக்கைகளும், என்கவுண்டர்களும் திடீரென அதிகரித்தன.
UNI செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ‘ நாடே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போது, உ.பி அரசு சட்டவிரோதமாக பசுக்களை அறுக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை தனிமைப்படுத்தி ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்க வேண்டுமென அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டது.
ஃபரித்பூர் காஜியைச் சேர்ந்த புராகான் (வயது 45 ) கூறும் போது, ” என்னுடைய கரும்புத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு, சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டிய கரும்புகளை ஒரு ட்ராலியில் எடுத்துக் கொண்டு நோன்பு திறப்பதற்காக வீட்டிற்குச் சென்றேன். எனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் நோன்பு திறந்து விட்டு சற்றே ஓய்வெடுக்க எண்ணிய போது, திடீரென சில காவலர்கள் என் வீட்டிற்குள் நுழைந்து கெட்ட வார்த்தைகளால் ஏசினர்; வீட்டை உடைத்து உணவைத் தூக்கி எறிந்தனர்.
கொடூர தாக்குதல்:
எனது 15 வயது மகன்,” என்ன நடந்தது அங்கிள்? எதற்காக இப்படி செய்கிறீர்கள்?”, எனக் கேட்டதற்காக அவனை லத்தியால் அடித்தனர்.
பிறகு ‘புரா என்பவர் யார்?’ எனக் கேட்டனர். பயத்தில் நான் ஓடத் தொடங்கவும் பின்னாலிருந்து ஒரு காவலர் கம்பால் எனது இடுப்பில் தாக்கவும் நான் கீழே விழுந்தேன்.
இடது முழங்கால் அருகே எலும்பு முறிந்ததோடு, எனது பாதம் வீங்கியது. அதனால் எனது கரும்புகளை வெட்டி ஆலைக்கு அனுப்ப முடியவில்லை. என்னைத் தவிர சம்பாதிக்க வேறு நபர் இல்லாததால் வருமானம் இல்லாமல் சிரமப்படுகிறோம்”, என்றார்.
இவரைப் போலவே நூர்ஹஸன் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ” அன்றிரவு எனது இரு பிள்ளைகளுடன் நான் வீட்டில் இருந்தேன். திடீரென காவலர்கள் வந்து சோதனை செய்த போது, என்னவென்று விசாரித்தேன். அதற்காக என்னை ஏசியதோடு என்னையும், எனது 12 வயது மகனையும் அடித்தனர்”, என்றார்.
பெண்களிடமும் மோசமாக நடந்த போலீசார்:
50 வயதிற்கு மேலுள்ள இம்ரானா என்ற பெண்மணி கூறுகையில், ” இரவு 8 மணி வாக்கில் எனது எருமைகளுக்கு தீனி வைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பிய போது ஏராளமான போலீஸார் நின்றிருந்தனர். காரணம் எதுவுமே இல்லாமல் என்னையும், எனது மூன்று மருமகள்களையும் அசிங்கமாக ஏசியதோடு வீட்டில் தயாரித்து வைத்திருந்த உணவு, வெட்டி வைத்திருந்த தர்பூசணித் துண்டுகள் அனைத்தையும் வீசி எறிந்தனர். எனது கடைசி மகன் ஏன் எனக் கேட்டதற்கு, ‘ நீங்கள் அதிகமாக மாட்டிறைச்சி உண்கிறீர்கள்”, என்று கூறினார்கள்”, என தெரிவிக்கிறார் அந்த மூதாட்டி.
சோட்டி என்ற நடுத்தர வயது பெண், ” எனது மகன் வயலுக்கு வைக்கோல் எடுக்க சென்றதால் நானும், எனது மருமகளும், இரு சிறு வயது பேரப்பிள்ளைகளும் மட்டும் வீட்டில் இருந்தோம். கிட்டத்தட்ட 25 போலீஸார் திடீரென வீட்டில் நுழைந்து எங்களை கொச்சையாகத் திட்டிக் கொண்டே வீட்டின் கதவை உடைத்தெறிந்ததோடு உணவுப் பொருட்களை வீசி எறிந்தனர்; கண்ணாடிப் பாத்திரங்களை உடைத்தெறிந்தனர். அவர்களின் அராஜகத்தால் அரண்டுபோன எனது பேரப்பிள்ளைகள் தங்களது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டனர்”, என கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மது மாதிம் ( 22 வயது), தில்ஷாத் அஹமது ( 28 வயது), மற்றும் வரிஷ் அஹமது ( 30 வயது) ஆகிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
இவர்களில் டேராடூனில் பணியாற்றிய மாதிம், ஊரடங்கிற்கு 15 நாட்களுக்கு முன்புதான் ஊர் வந்திருந்தார். அன்றிரவு மாதிம், அவரது மனைவி, மூன்று சகோதரர்கள், மூத்த அண்ணியார் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். இஃதாருக்குப் பிறகு அவர் தனது அறைக்குச் சென்ற சமயம் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்தார்கள்.
என்ன நடக்கிறது எனப் பார்ப்பதற்காக மாதிம் வெளியே வந்த உடன் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தது போலீஸ். அவரது இளைய சகோதரர் தாசிம்மை தடியால் தாக்கினர். இங்கும் வீட்டின் பாத்திரங்கள், அடுப்பு உடைத்து வீசப்பட்டன.
அராஜக வெறியாட்டம்?:
தில்ஷாத் அவரது மனைவி, பெற்றோர், இரு சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர் ஆகியோருடன் வாழும் வீட்டிலும் இதே போல் அடாவடியாக நுழைந்த போலீஸ் அசிங்கமாக ஏசியதுடன் வீட்டையும் துவம்சம் செய்தது.
வரிஷ் வீட்டிலும் இதேபோல் அத்துமீறி வீட்டையும், பொருட்களையும் உடைத்த போலீஸார், வரிஷ் உடைய தம்பி அனிஷ்-ஐ தேடி அவர் கிடைக்காததால் வரிஷை அடித்து இழுத்துச் சென்றனர்.
காரணம் என்னவென்று தெரியாமலே காவல் நிலையம் இழுத்துச் செல்லப்பட்டு இரவு முழுக்க அங்கு கழித்த நிலையில், காலையில் அங்கு கிராமத் தலைவர் இக்பாலை அழைத்து மூவரையும் விடுவித்தனர்.
பசு கொன்றதாக பரவிய வதந்தி:
பசுவை அறுத்ததாக வந்த சந்தேகத் தகவலின் அடிப்படையிலேயே அம்மூவரும் பிடித்து வரப்பட்டதாக இக்பாலிடம் போலீஸார் தெரிவித்தனர்.
பிஜ்னோர் காவல்நிலையத்தின் தலைமை அதிகாரி திரு.ரமேஷ் சந்திர சர்மா அவர்களிடம் இது பற்றி பத்திரிக்கையாளர் வினவிய போது ,” எனக்குத் தெரிந்து அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை”, என மறுத்தார்.
ஆனால் இதுபற்றி கிராமவாசிகள் சிலரிடம் விசரித்த போது, ” அதிகமான முஸ்லிம்கள் என்னுடைய மாவு மில்லிற்கு வரக்கூடியவர்கள். இங்கு பசு அறுப்பு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. தேவையின்றி போலீஸார் தொந்தரவு செய்கிறார்கள்” எனக் கூறினார் நரேஷ் குமார் பிரஜாபதி.
நொய்டாவில் பணியாற்றி ஊரடங்கின் காரணமாக சொந்த கிராமம் வந்துள்ள அசோக், ” இங்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம். எங்களுடைய வயல்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளன; ஒன்றாக விவசாயம் செய்கிறோம்; ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம். இங்கு நடக்காத பசு அறுப்பு பற்றி யாரோ தவறாக வதந்தி பரப்பியுள்ளனர்”, என்று கூறினார்.
இறுதியாக கிராமத் தலைவர் இக்பால், ” தகுந்த காரணமின்றி, தவறான தகவலின் அடிப்படையில் போலீஸார் இது போன்று வீடுகளை நாசமாக்கியிருக்கக் கூடாது”, என வேதனை தெரிவித்தார்.