உபியில் 60 குழந்தைகள் மரணித்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்டர் கஃபில்கான் குற்றமற்றவர் என்று அறிவிப்பு !
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உபி மாநில கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்டர் கஃபில் கான் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்தார்.தன்னால் இயன்ற அளவு உயிர் சேதம் ஏற்படுவதை தடுத்தார்.இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி ஹீரோவாக ஜொலித்தார் கஃபில் எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு டாக்டர் கஃபில் கான் மீதே வழக்கு பதிவு செய்தது. ஊழல், மருத்துவத்தில் அலட்சியம்,கடமையை சரிவர செய்யாதது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி 9 மாதங்கள் சிறையில் அடைத்தது யோகி தலைமையிலான அரசாங்கம்.அதன் பிறகு சிறையில் இருந்து வெளியேறினார் கஃபில் கான்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மருத்துவமனை உள்விசாரணைக் குழு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்று உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று கபீல் கானிடம் ஒப்படைக்கப்பட்ட 15 பக்க விசாரணை அறிக்கையில், உயர்நீதமன்றம் கூறியதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
கபீல் கான் குறித்து விசாரணை செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூகுமார் இந்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் மாநில அரசிடம் சமர்பித்துள்ளார். மருத்துவமனையில் திரவ ஆக்ஸிஜனை பராமரித்தல், டெண்டர் போன்றவற்றிக்கு கஃபில் கான் பொறுப்பு சாட்டப்பட்டிருக்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.மேலும் அவர் என்செபலிடிஸ் வார்டின் நோடல் அதிகாரி அல்ல எனவே குழந்தைகள் மரணத்தில் இவர் பங்கில் அலட்சியம் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2017 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 10-12 தேதிகளில் , 54 மணி நேரம் மருத்துவமனையில் திரவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை நிலவியது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
சிறையில் இருந்து விடுதலையானதிலிருந்து, தான் குற்றமற்றவர் என்றும் தவறாக இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கஃபில் தொடர்ந்து கூறிவந்தார். மேலும் அவர் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ சோதனைகளை நடத்தி வந்தார். அவருக்கு ஆதரவாக பல்வேறு சிவில் சமூக ஆர்வலர்களும் கடிதங்களை எழுதினர்.
இந்த முழு சம்பவமும் “மனிதனால் உருவாக்கப்பட்டவை” என்றும், இது தொடர்பாக “அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்,” என்றும் டாக்டர் கபில் கான் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் பலிக்கடாவாக ஆக்கப்பட்டதாகவும் , உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது வரையிலும் கூட திரு.கஃபில் கானின் பணியிடை நீக்கம் அமலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் செலுத்துமாறு கோரி மருத்துவமனை அதிகாரிகளின் பல கடிதங்களை உ.பி. அரசிற்கு அனுப்பியும் அரசாங்கம் அதை புறக்கணித்தது என்றும் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை லட்சம் ரூபாய்களுக்கு ஏறியதால் ஆக்சிஜன் வழங்கிவந்த நிறுவனம் இறுதியில் விநியோகத்தை நிறுத்தியது என்று கடந்த 2018 ஆம் ஆண்டில் ‘தி வயரின்’ விசாரணையில் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.