சீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் (uighur)இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று ஒரு புலனாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.இது குறித்து bbc செய்தி நிறுவனமும் பிரசுரித்திருந்தது.
தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 20 லட்சம் வரையிலான சீன முஸ்லிம்கள் இஸ்லாத்தை கைவிடுமாறும், பன்றி இறைச்சி உண்ணவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். மஸ்ஜித்களுக்கு செல்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஹஜ் கடமையை நிறைவேற்றுவது என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன .கம்யூனிஸ சித்தாந்தகோட்பாடுகளை மனனமிடவும் சீனாவில் பெரும்பான்மையினர் பேசும் மொழியான “மேந்தரின்” மொழியை கற்றுக்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை செய்ய மறுப்பவர்கள் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்வதாகவும் மேலும் சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டிவருகின்றன. சீனாவில் உறைவிடப் பள்ளிகளைக் கட்டுவதற்கு பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் வேகமாக தொடர்ந்து நடந்து கொண்டே இருகின்றன. இங்கு தான் குழந்தைகளை அவர்களுடைய (இன ,மத)அடிப்படை வேர்களில் இருந்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப் பட்டுள்ளனர்.
ஜின்ஜியாங்கில், ”கடுமையாக தனிமைபடுத்தப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் உள்ள” பள்ளிக்கூடங்களில் அனைத்துக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பல பள்ளிக்கூடங்களில், கண்காணிப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. 10,000 வோல்ட் மின்சார வேலிகள், வெளி எல்லை அலார வசதி ஆகியவையும் அங்கு உள்ளன. முகாம்களையே மிஞ்சும் அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சில பள்ளிகளில் உள்ளன.
பொதுவெளியில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், வெளிநாடுகளில் உள்ள பல குடும்பத்தினரிடம் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையிலும், அந்தப் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு நிகழும் கொடுமையை பிபிசி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாக கூறி , வீகர் மக்களுக்கு “தொழிற்பயிற்சி மையங்களில்” கல்வி அளிக்கப் படுகிறது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பலரும் தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக, வழிபாடு செய்ததற்காக, புர்கா அணிந்ததற்காக, அல்லது துருக்கி போன்ற வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
வீகர் இன முஸ்லிம்களுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு
இந்நிலையில் ஜப்பான் , UK உள்ளிட்ட 22 மேற்கத்திய நாடுகள் சீன அரசின் வீகர் இன மக்கள் விஷயத்திலான மனித உரிமை மீறல்களை கண்டித்து அறிக்கை ஒன்றை ஐநா சபைக்கு அனுப்பி உள்ளது சீனாவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது . 22 நாடுகளில் ஒன்று கூட முஸ்லிம் நாடு கிடையாது என்பது தான் அதிர்ச்சிக்குரிய செய்தி.
முஸ்லிம் நாடுகள் கைவிடல் :
மாறாக இஸ்லாமிய நாடுகள் என்று அறியப்படக்கூடிய சவூதி அரேபிய,பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்,குவைத்,சரியா , பஹ்ரைன் மற்றும் ரஷ்யா, மியான்மர்,கியூபா, வடகொரியா,பிலிப்பைன்ஸ் பெலாரஸ் போன்ற 37 நாடுகள் சீன அரசின் அராஜக மனித உரிமை மீறல்களை ஆதரிக்கும் விதமாக சீன அரசின் செயல்பாட்டினை புகழ்ந்து மனித உரிமைகள் விஷயத்தில் சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தியுள்ளது என்று ஐநா (UNHRC )விற்கு கடிதம் எழுதி உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை உண்டாக்கி உள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் ஜின்ஜியாங்கிற்கு பாதுகாப்பு திரும்பியுள்ளதாகவும், அங்குள்ள அனைத்து இன மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக அங்கு பயங்கரவாத தாக்குதல் எதுவும் இல்லை என்றும், மக்கள் மகிழ்ச்சி, நிறைவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் வலுவான உணர்வை அனுபவிப்பதாககவும் அதில் கூறப்பட்டுள்ளது.
”எங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்த பிறகும் உலக நாடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன?” என்று வீகர் இன மக்கள் கேட்கும் கேள்விக்கு மனித குலத்திடம் பதில் இல்லை.