தமிழ்நாட்டில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்களில் திருச்சியில் மருத்துவர் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பியதாக செய்தி வெளியிடப்பட்டது. சில ஊடகங்கள் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் அதில் தெரிவிக்கப்பட்ட விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வேறு சில ஊடகங்கள் சம்பவத்தை நேரில் பார்த்ததை போல் பதிந்துள்ளனர். தந்தி டிவி செய்தியிலும் நேரில் சென்று பார்த்ததை போல் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, முகக் கவசத்தை வீசியும் அவர் அடாவடி தனம் செய்ததால், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.’
இதற்கு ஒருநாள் முன்பாக, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடம் நியூசு குழு தொடர்பு கொண்டு அவர்களின் தற்போதைய நிலை பற்றி கேட்டது. அப்போது பேசிய அவர்,
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என அரசால் அறிவிக்கப்பட்ட 40 பேரை தனி வார்டுகளில் வைக்காமல் ஒரே வார்டில் வைத்து உள்ளனர். இதனால் குணமடைந்த ஒருவருக்கு குணமடையாதவர் மூலம் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன் காலாவதியான கருவியை கொண்டு தான் எங்களிடம் கொரோனா சோதனை நடத்தினர். இதனால் அதன் முடிவுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் குணமாகிவிட்டோமா என்பதை அறிய எங்களிடம் 2-வது சோதனையும் இதுவரை நடத்தப்படவில்லை.
கொரோனா நெகட்டிவ் ஆன 70 பேரிடம் டிஸ்சார்ஜ் சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் டிஸ்சார்ஜ் சீட்டை பெற்றுக் கொண்டு ஜமால் முகமது கல்லூரியில் அடைத்து உள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்படாதவர்களை இப்படி கும்பலாக அடைத்து வைத்தால் கொரோனா பரவாதா…?”
மிக மோசமான உணவை தருகின்றனர். எங்களால் அதை சாப்பிட முடியவில்லை. எனவே அனைவருக்கும் வெளியிலிருந்து உணவு எடுத்து வரப்படுகிறது. எங்களுக்கு எந்த விதமான மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவமனை முறையாக வழங்குவது இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டதை போல் உள்ளது.
எங்களை என்ன செய்ய போகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுவரை எங்கள் 40 பேருக்கும் எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. நாங்கள் நலமுடன் இருக்கிறோம். அப்படி இருக்க எங்களுக்கு தற்போது கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடத்த வேண்டும். ஆனால், செய்யவில்லை. இஸ்லாமியர்களின் கணக்கை அதிகரித்துக் காட்ட இவ்வாறு செய்கிறார்களா என தெரியவில்லை.” என்றார்.
இந்த நிலையில் எச்சில் துப்பியதாக ஊடகங்களில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள அதே நபரிடம் தொடர்புகொண்டோம். அப்போது அவர் பேசியதாவது..
“வீட்டில் உள்ளவர்களையும் அழைத்ததால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசினோம். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை எல்லாம் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கிறீர்கள். ஆனால், டெல்லியிலிருந்து வந்த எங்களை ஏன் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அடைக்கிறீர்கள் எனக்கேட்டோம். நீண்ட நேரம் அணிந்திருந்த மாஸ்க் இடையூறாக இருந்ததால் அதை கழட்டி வைத்துவிட்டு பேசினோம்.
அதை திரித்து நாங்கள் எச்சில் துப்பியதாக பொய் புகார் அளித்து செய்தி வெளியிட்டு விட்டார்கள். எங்களிடம் பேசிய மருத்துவரும் மாஸ்கை கழட்டி தான் பேசினார். அப்போது, கூட மாஸ்கை உங்களாலேயே இவ்வளவு நேரம் போட முடியவில்லையே, நாங்கள் எப்படி இவ்வளவு நாட்கள் அணிந்திருக்க முடியும் எனக்கேட்டோம். இது தான் நடந்தது. அதற்குள் ஒரு பத்திரிகை பிரியாணி கொடுக்காததால் எச்சில் துப்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது. எங்களுக்கு வாரம் ஒருமுறை பிரியாணி வந்துகொண்டு தான் இருக்கிறது. நாங்கள் ஏன் அதற்கெல்லாம் கேட்கப்போகிறோம்.” என்றார் அவர்.
நன்றி:நியூஸ்யூ.