Corona Virus Tamil Nadu

சேலம்: ராஜகணபதி மற்றும் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மத ரீதியான எந்த வித நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து அக்கோவில் அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரை திருநாளையொட்டி, சேலம் ராஜகணபதி கோவிலைத் திறந்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். வரிசையில் நின்று பக்தர்களும் வழிபட்டனர்.

தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பூஜை நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அர்ச்சகர்கள் விஸ்வநாதன், ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது சேலம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அய்யப்பன் கோவிலிலும் பூஜை:

அதேபோல் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து புகாரின் பேரில் அய்யப்பன் கோவில் அர்ச்சகர்கள் விஸ்வநாதன், ஸ்ரீதர்பட்டு, சீத்தாராமன் பிரேமிகன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அர்ச்சகர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். கைது செய்யப்பட்ட மற்றவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 480 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.