கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது.
நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து ஜனஜக்ருதி சமிதி இந்த நிலம் கோட்டே வெங்கடரமண கோவிலுக்கு சொந்தமானது என்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் போது ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்றும் கூறினர்.
புது புது கதை சொல்லும் இந்துத்துவாவினர்:
“சிலரின் கூற்றுப்படி, அந்த இடத்தில் வேதங்கள் கற்பிக்கப்பட்டன, இந்து ஜனஜக்ருதி சமிதியின் சார்பாக, நிலத்தை அளவீடு செய்து அதன் உண்மையான உரிமையாளருக்கு மாற்ற வேண்டும் என்று நான் கோருகிறேன்.” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. “
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி அதன் கட்டுமானத்தைத் தொடங்கினார். திப்புவின் இந்த கோடைகால அரண்மனை கி.பி 1778 மற்றும் கி.பி 1784 க்கு இடையில் கட்டப்பட்டது என்று கர்நாடக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
மறுபுறம், வெங்கட்ரமண ஸ்வாமி கோயில் 15 ஆம் நூற்றாண்டில் மைசூர் ஆட்சியாளரான சிக்கதேவராஜ வாடேயாரால் கட்டப்பட்டது என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இந்து மக்களின் வழிபாட்டு தளங்களை பாதுகாத்த திப்பு :
கோவிலுக்கு வெளியே உள்ள ஒரு குறிப்பேட்டில், அலி மற்றும் சுல்தான் ஆகியோரின் ஆட்சியின் போது கோவிலுக்கு ஆதரவு வழங்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளது.
“ஹைதர் மற்றும் திப்பு இருவரும் இந்த கோவிலின் மீது மிகுந்த மரியாதையும், அக்கறையும் கொண்டிருந்தனர், மேலும் இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு புனித ஸ்தலமாகவும் மாறியது” என்று பலகை கூறுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மஸ்ஜித்-இ-ஆலா முதலில் ஹனுமான் கோயிலாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் துவக்கப்பட்டுள்ள ஒரு புதிய இந்துத்துவா அமைப்பு கூறி இருந்தது. தற்போது ஒரு வாரத்திற்குப் பிறகு திப்பு சுல்தானின் மாளிகை குறித்து இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.. நரேந்திர மோடி விசார் மஞ்ச் அமைப்பினர் மே 13 அன்று மாண்டியா துணை ஆணையரிடம் இந்துக்கள் அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்தனர்.
‘மூதாலா பகிலு ஆஞ்சநேய சுவாமி கோவிலை’ இடித்து அதன் இடத்தில் திப்பு சுல்தான் மசூதியை கட்டியதாக அந்த அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி, டெல்லியில் உள்ள குதுப் மினார் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி ஆகியவற்றில் இதே போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது கர்நாடகாவிலும் இந்துத்துவ கும்பல்கள் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன.