தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கவுள்ள தமிழ் நாட்டில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், தெலுங்கானாவின் மஞ்சள் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆர்மூர் நகரில், மஞ்சள் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் நகல்களை அவர்கள் எரித்தனர்.பாஜக வின் நிஜாமாபாத் மக்களவை உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
விவசாயி கேள்வி:
வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உள்ளூர் மஞ்சள் விவசாயி மோகன் ரெட்டி கூறுகையில், “தமிழ்நாட்டில் மஞ்சள் சாகுபடிக்கு 30,000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளது, எனினும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் மஞ்சள் வளர்க்கும் தெலுங்கானாவுக்கு மஞ்சள் மேம்பாட்டு வாரியத்தை அமைத்திட பாஜக மறுப்பது நியாயமில்லை.” என கூறினார்.
ஏமாற்றபட்ட தெலுங்கானா மக்கள்:
நிஜாமாபாத் மாவட்டம் தெலுங்கானாவில் மஞ்சள் வர்த்தகத்தின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாகும். கடந்த 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக வேட்பாளர் தர்மபுரி அரவிந்த், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிஜாமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைப்பதாக வாக்காளர்களுக்கு உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தெலுங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு மார்ச் 15 அன்று திட்டவட்டமாகக் கூறியது.
இந்தியாவில் மொத்தம் 11.53 லட்சம் டன் உற்பத்தியைக் கொண்ட முக்கியமான மசாலா பயிர்களில் மஞ்சள் ஒன்றாகும், இது உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 78% ஆகும். 3.86 லட்சம் டன் கொண்ட மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானா 1.37 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.