Kashmir

பேராசிரியர் அப்துல் ரஹ்மான் கிலானி மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அஞ்சலி !

சமீபத்தில் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் மரணித்தார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்;பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !

அப்துல் ரகுமான் கிலானி, டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாகிர் உசேன் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து வந்த பேராசிரியர்.

2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பத்து பேர் மாண்டு போனார்கள். இது தொடர்பாக அப்சல்குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அப்துல் ரஹ்மான் கிலானியும் மரண தண்டனைக்கு ஆளாகிறார். இது அவருக்கு மட்டமல்ல அவரது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கிலானி கைதில் எந்த சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. சட்டவிரோதமாக ஆடைகள் உருவப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். விசாரணைக் காலத்தில் 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கர் மூலம் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தால் நிரபராதி என 2003-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்து வந்தார். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பல்வேறு உண்மை அறியும் குழுக்களில் அவர் பங்கேற்றுள்ளார். அப்சல் குரு தண்டிக்கப்பட்ட வழக்கில் உள்ள பல்வேறு குறைபாடுகளையும் அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். எனவே காவல் துறையினரால் அவர் தொடர்ந்து துன்பறுத்தப்பட்டார். 2005-ம் ஆண்டு ஒரு முறை அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தார். அவருக்கு எதிராக காவல்துறையினரால் புனையப்பட்ட அற்பமான கட்டுக்கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து அச்சேற்றி வந்தன.

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கு விசாரணையின்போது, அப்சல் குருவுடன் கிலானி. (கோப்புப் படம்)
2016-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றின் போது, நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக ஒரு சிலர் முழக்கம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக கிலானி மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. கிலானி மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது தேசத் துரோகம், குற்றச் சதி, சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஒருவரும் புகார் தராத நிலையிலும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாகவே முன்வந்து கிலானி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ததாகக் கூறியது டெல்லி காவல்துறை. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்பதற்காகவே அவர் மீது இந்த நடவடிக்கை என்கிறது டெல்லி போலீஸ். மேலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் கல்லூரியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பல்வேறு நெருக்கடிகளை அரசு கொடுத்தாலும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்.

தனது சொந்த மாநிலமான காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அவர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புனித ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் நந்திதா நாராயண் கூறுகிறார்

இந்தச்சூழலில் கிலானி அவர்கள் 23.10.2019 அன்று தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவரது மறைவு மக்களுக்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும். அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களது மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி கொள்கிறது.

சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்