உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் யாரும் குற்றம் செய்யாமலும், சட்டத்தை கையில் எடுக்காமலும் இருப்பதற்காக, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத போராட்டங்களில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986, கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தி உள்ளார்.
இந்த கருத்துக்கள் தான் போராட்டக்காரர்களை கொடூரமாகவும் சட்டவிரோதமாகவும் சித்திரவதை செய்ய காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 300க்கும் மேற்பட்டோரை உ.பி போலீசார் கைது செய்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட குடிமக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.நபிகளார் குறித்து இழிவான பேசுக்களை தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர்கள் இன்னும் கைது செய்யபடாமல் உள்ள நிலையில் உபி யில் போராட்டகாரர்கள் மீது சட்டத்திற்கு மாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்திகளால் தாக்கப்படுவதும், போராட்டக்காரர்களின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படுவதும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடிப்பதும் போன்ற பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருவதாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான அடக்குமுறையானது சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சீர்குலைப்பதும், குடிமக்களின் உரிமைகளை மீறுவதுமாகும், மேலும் அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குகிறது.
காவல்துறையும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்டிடங்களை இடித்த விதமானது ‘நீதித்துறைக்கு அப்பால் நின்று வழங்கப்பட்ட தண்டனை’ என்ற தெளிவான முடிவுக்கு இட்டுச் செல்கிறது, இது சட்டவிரோதமான ஒரு மாநிலக் கொள்கையினால் ஏற்பட்ட விளைவு” எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பெகாசஸ் வழக்குகளில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுத்தது போல , உத்தரபிரதேச மாநிலத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர் செய்ய உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட நீதிபதிகள் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.
- நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி, முன்னாள் நீதிபதி, உச்சநீதிமன்றம்
- நீதிபதி வி.கோபால கவுடா, முன்னாள் நீதிபதி, உச்சநீதிமன்றம்
- நீதிபதி ஏ.கே. கங்குலி, முன்னாள் நீதிபதி, உச்சநீதிமன்றம்
- நீதிபதி ஏபி ஷா, முன்னாள் தலைமை நீதிபதி, டெல்லி உயர்நீதிமன்றம்
- நீதிபதி கே சந்துரு, முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
- நீதிபதி முகமது அன்வர், முன்னாள் நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்றம்
- சாந்தி பூஷன், மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
- இந்திரா ஜெய்சிங், மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
- சந்தர் உதய் சிங், மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
- ஸ்ரீராம் பஞ்சு, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்
- பிரசாந்த் பூஷன், வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
- ஆனந்த் குரோவர், மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் இனி கட்டிட இடிப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி ஜமியத் உலமா-ஐ-ஹிந்த், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.