CAA-ல் இருந்து முஸ்லீம்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து முதலில் இஸ்லாமியர்கள் சில போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் வட கிழக்கு மக்கள் CAA-வை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இப்படியாக போராட்டங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை ஒடுக்க காவல்துறை பல்கலை கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதன் பின்னர் போராட்ட களம் மாறியது, இஸ்லாமியர்கள் அல்லது வட கிழக்கு மக்களின் போராட்டம் என்றிருந்த களம், மாணவர்களின் போராட்டமாக மாறியது, அவர்களுக்கு ஆதரவாக அனைத்து மதத்தையும் சேர்ந்தவர்களும், அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இன்றைக்கு போராட்ட களம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுக்க பரவியுள்ளது. ஐ.நா உட்பட பல சர்வேதச அமைப்புகள் CAA-வை எதிர்கின்றன.
இந்தியா முழுக்க NRC அமல் படுத்தபடும் என பாரளுமன்றத்தில் சூளுரைத்தார்கள். ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டோம் என கர்ஜித்தார்கள், ஆனால் இன்றைக்கு NRC-யை அமல் படுத்தும் திட்டமே அரசிடம் இல்லை என்று பின்வாங்கியுள்ளனர்.
கல்வி நிறுவனத்தில் கை வைத்த உடன் எப்படி போராட்ட களம் உலக அளவிற்க்கு மாறியது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
எந்த ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலும் அதில் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் படிப்பார்கள். வருடத்திற்க்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த கல்வி நிறுவனத்தில் பட்டம் பெறுவார்கள்.
இப்படி பட்டம் பெற்றவர்கள், அரசு துறை, காவல் துறை, நீதி துறை, பத்திரிக்கை துறை, தொழில் நுட்பத்துறை , வெளிநாடுகள் என உலகம் முழுக்க பரவி இருப்பார்கள். தான் படித்த கல்லூரிக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஜாதி, மதம் என அனைதையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களால் ஆன அனைத்து உதவியையும் செய்ய முன்வருவார்கள்.
மேலும் பிற கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் மத பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு மாணவர் என்ற அடிப்படையில் ஒன்றினைந்து போராடுவார்கள்.
இப்படித்தான் CAA-விற்க்கு எதிரான போராட்டங்கள், சர்வாதிகாரத்திற்க்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. CAA, NRC, NPR ஆகியவை முற்றிலுமாக திருப்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்கின்றது.
ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகம் அலிகரில் 1920- ஆம் ஆண்டு மவ்லானா முஹமதுல் ஹஸன், மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற இஸ்லாமிய கல்வியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது , பின்னர் 1935-ஆம் ஆண்டு டெல்லியில் தற்போதுள்ள ஓக்லா (Okhla) பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய கல்வி நிறுவனமாக இருந்த ஜாமியா மில்லா இஸ்லாமியா பல்கலை கழகம் 1988-ஆம் ஆண்டு மத்திய பல்கலை கழகமாக (Central university) மாற்றப்பட்டது.
இங்கு மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), சட்டம் (Law), கலை (Arts) , அறிவியல் (Science), பத்திரிக்கை துறை உட்பட அனைத்து படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றது.
போராட்ட களத்தின் திசையையும், விசையையும் மாற்றியமைத்தது ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகம் என்றால் அது மிகையாகாது.
ஜனநாயக நாட்டில் உரிமைகளை வென்றெடுப்பதில் கல்வி நிலையங்களின் முக்கியதுவத்தை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றது.
கல்வி நிலையங்களை அதிகம் அதிகம் உருவாக்கி, அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்க முயற்சி செய்வோம்.
ஆக்கம்: சித்திக்