நெடுநாள் பசி, தாகம் மற்றும் நீண்ட தூரப் பயணம் காரணமாக நீரிழப்பு ஆகியவற்றால் சில தினங்களுக்கு முன்பு இரயிலில் இறந்த ஒரு பெண்ணை, தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயலும் காணொலி வெளியாகி கல் நெஞ்சையும் கரைய வைத்தது.
குஜராத்திலுள்ள அஹமதாபாத்திலிருந்து பிஹாரிலுள்ள முஸாஃபர்பூருக்கு கடந்த திங்களன்று புலம் பெயர் தொழிலாளிகளுக்கான ஷ்ரமிக் ரயில் மூலம் வந்த அர்பினா காத்தூன் என்ற 35 வயது பெண்மணி மனிதாபிமானமற்ற அரசின் அலட்சியத்தால் பசியால் ஒட்டிய வயிறோடு உயிரை விட்டதை அறிந்த பிஹாரின் எதிர்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD) கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அவர்கள் அக்குடும்பத்திற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார்.
அக்குடும்பத்திற்கு ஐந்து லட்சம் நிதி உதவி அளித்ததோடு, காத்தூனின் இரு குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும், அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கடிஹார் என்ற ஊரில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் விஷயத்தில் அரசின் அணுகுமுறையைக் கண்டித்த தேஜஸ்வி, “பசி, தாகத்தால் ரயிலில் ஏற்பட்ட மரணங்களுக்கு யார் பொறுப்பு? மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசும், ரயில்வே துறையும் செய்த உதவிகள் என்ன?”, என வினா எழுப்பியுள்ளார்.