ஜார்க்கண்ட் மொமண்டம் உச்சி மாநாடு தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் ரகுபார் தாஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜ்பாலா வர்மா மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி-Anti Corruption Bureau ) புகார் பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடி ரூபாய் ஊழல்:
உள்ளூர் நாளிதழின் (அவென்யூ மெயில்) ஒன்றின் அறிக்கையின்படி, ஜனசபா என்ற அரசு சாரா அமைப்பைச் (NGO) சேர்ந்த பங்கஜ் குமார் யாதவ் என்பவரே ரகுபர் மீது புகார் அளித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடி நடைபெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகுபார் தாஸ் மழுப்பல்:
”இப்போது அரசாங்கம் அவர்களுடையது, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம், ” மேலும், ” இந்த விஷயத்தில் நான் அதிகம் பேச மாட்டேன், ஏனென்றால் ஜார்க்கண்ட் மொமண்டம் உச்சி மாநாடு மிகவும் வெளிப்படையான முறையில் நடைபெற்றது ”என ரகுபார் தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண் முதல்வர் ஹேமந்த் சோரன் எச்சரிக்கை:
மோசடி செய்பவர்கள், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரத்துவத்தினர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜார்க்கண்ட் சட்டசபையின் சிறப்பு அமர்வின் கடைசி நாளில் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.