ஜெய்ப்பூர் : “ஒவ்வொரு நாட்டிலும் தேசிய பொக்கிஷம் என்று ஒன்று இருக்கும், நம்முடையது நாட்டின் பொக்கிஷம் இளைஞர்கள் தான்… நம் நாட்டின் இளைஞர்கள் இந்த உலகத்தையே மாற்ற வல்லவர்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் 21 ஆம் நூற்றாண்டு இந்தியா தனது பொக்கிஷத்தை வீணாக்குகிறது.
இந்த நாட்டிற்காக உங்களால் ஆனதை செய்வதற்கு கூட இந்த அரசாங்கமும் பிரதமரும் அனுமதிப்பதிலை. இந்த நாட்டின் இளைஞர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள் … பட்டங்கள் பெற்றாலும் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை ” என்று ராயுல் காந்தி இன்று ஜெய்ப்பூரின் ஆல்பர்ட் ஹாலில் பேசினார்.
மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை:
மேலும் பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை. குறிப்பாக கிராமப்புற பொருளாதாரம் குறித்த புரிதல் சிறிதும் இல்லை. ஒரு 8 வயது சிறுவனிடம் பணமதிப்பிழப்பு நன்மை விளைவித்ததா? தீமை விளைவித்ததா என்று கேளுங்கள். சிறுவன் கூட சொல்வான் தீமை தான் செய்தது என்று.
வேலையின்மை குறித்து வாய் திறக்காத மோடி:
இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவதேயில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “பிரதமர் மோடி எங்கு சென்றாலும் அவர் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி பற்றி தான் பேசுகிறார், ஆனால் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான வேலையின்மை பற்றி பேசுவதே இல்லை” என்று ஜெய்ப்பூர் பொது கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். “பிரதமர் மோடி இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார், ஆனால் நடந்துள்ளதோ கடந்த ஆண்டு மட்டும் நாட்டின் ஒரு கோடி இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளது தான்” என்று அவர் மேலும் கூறினார்.