Political Figures Political Vendetta Shiv Kumar

கர்நாடகா : டி.கே.சிவகுமார்- உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி!-சந்திக்க சென்ற சித்தராமையாவிற்கு அனுமதி மறுப்பு !

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வியாழக்கிழமை (12-9-19) உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து அவர் புதுதில்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சிவக்குமாரை சந்திக்க ஆர்.எம்.எல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். எனினும் சிவகுமாரை சந்திக்க சித்தராமையா வார்டுக்குள் நுழைவதற்கு முன்பே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.அவரை சந்திக்கவிடவில்லை என்று முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

டி.கே.சிவகுமாரின் ED காவல் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, எனினும் அமலாக்கத்துறை கைதை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகுமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள ஏழு வினாடி வீடியோவில், ” தற்போதைய சூழ்நிலையில், பழிவாங்கும் அரசியல் நடைமுறை சட்டத்தை விட வலுவாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் சிவகுமார் ஒத்துழைக்கவில்லை என்று ED கூறியுள்ளது. ‘ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது விசாரணைக்கு ஒத்துழைக்காதது அல்ல’ என்று காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவகுமாரின் கைது செய்யப்பட்டுள்ளது ஒரு பழிவாங்கும் அரசியல் நடைமுறை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. பணமோசடி வழக்கு தொடர்பாக டி.கே.சிவகுமாரின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் சச்சின் நாராயணனிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.