ஒரு பேரல் கச்சா எண்ணெயை 110 டாலருக்கு விலை கொடுத்து வாங்கும் போது கூட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
மோடி பிரதமராக வருவதற்கு முன்பு, அதாவது 2013ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109-111 டாலர் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்வதில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 54.77 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரையில் இருந்தது. அதன் பின்பு அடுத்த 6 மாதத்தில் 55 ரூபாயில் இருந்து 63 வரையில் உயர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைச் சேர்ந்து 2013ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்தபட்சம் 5,380.42 ரூபாயும், அதிகப்படியாக 6,749.25 ரூபாயாகவும் இருந்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை சராசரியாக ஒரு லிட்டர் 76 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 54.41 டாலர். டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 73.13 டாலர்.
இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் விலை 3979 ரூபாய்.
இது 2013 அளவீட்டை ஒப்பிடுகையில் சுமார் 2000 ரூபாய் குறைவு.
ஆனாலும் பெட்ரோல் விலை நாடு முழுவதும் சராசரியாக 91 ரூபாயைத் தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
2013ஆம் ஆண்டை தற்போது ஒப்பிடுகையில் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது; கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது; இந்திய அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குச் சுமார் 2000 ரூபாய்க்கு மேலாகக் குறைந்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையிலும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு விதித்து வரும் கலால் வரி தான்.
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடிப்படை கலால் வரியாக 1.40 ரூபாயும், சிறப்புக் கூடுதல் வரியாக 11 ரூபாயும், புதிதாக அறிவிக்கப்பட்ட அக்ரி இன்ஃபரா டெவலப்மெண்ட் செஸ் வரியாக 2.50 ரூபாயும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் வரியாக 18 ரூபாயும் வசூலிக்கிறது.
கிட்டத்தட்ட மத்திய அரசு மட்டும் சுமார் 34 ரூபாயை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக வசூலிக்கிறது.இதைத் தாண்டி மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் காரணத்தால் கிட்டதட்ட 54 முதல் 55 ரூபாய் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி வெளிநாட்டில் (ஓமன், பிரிட்டன், துபாய் ஆகிய நாடுகள்) இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்-ஐ சுத்திகரிப்புச் செய்து பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றி விற்பனை சந்தைக்கு வரும் போது ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 31.82 ரூபாய்.
பெட்ரோலை ரீடைல் விற்பனையங்களில் கொண்டு சேர்க்கச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 0.28 ரூபாய் அளவிலான தொகையை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ரீடைல் தளத்தில் அதாவது பெட்ரோல் பங்குகளில் 32.10 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கப்படுகிறது.
ஆக 31.82 ரூபாய் மதிப்பிலான ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரியின் மூலம் சுமார் 53.51 ரூபாயை வரியாக மட்டுமே செலுத்தி வருகிறோம்.
ஆக்கம்: அபுதாஹிர்