பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை- நீதிமன்ற வளாகத்தில் “பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொண்டாடிய கும்பல்.
கடந்த ஏப்ரல் 1, 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் தனது மகன்களுடன் ஜெய்ப்பூர் மாட்டுச் சந்தையில் உரிய ரசீதுடன் மாடுகளை வாங்கி சென்று கொண்டுருந்த பொழுது அவருடைய வாகனத்தை பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ள பசு தீவிரவாத குண்டர்கள் வழி மறித்தனர்.வாகனத்தின் உள் இருந்த பெஹ்லு கானை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளி, கடுமையான முறையில் கம்பிகள் , உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கினர். தாக்கப்பட்ட அவர் மறுநாள் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
தாக்குதல் நடந்து தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய வைரல் வீடியோவில் அவரின் கழுத்தை பிடித்து இழுக்கும் நபர்கள், அவரை தரையில் கீழே தள்ளி காட்டுத்தனமாக எட்டி உதைக்கும் நபர்கள் என குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ மற்றும் பிற ஆதாரங்களை வைத்து ஓம் யாதவ் (45), ஹுகும் சந்த் யாதவ் (44), சுதிர் யாதவ் (45), ஜக்மல் யாதவ் (73), நவீன் சர்மா (48), ராகுல் சைனி (24) – ஆகியோர் மீது 147, 323, 341, 302, 308, 379 மற்றும் 427 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மொத்தம் பெஹ்லு கான் வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் அதில் மூன்று பேர் சிறார்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள்.எனவே இவர்கள் மூவரும் என்றைக்கோ பினையின் மூலம் சிறையிலிருந்து வெளியேறிவிட்டனர்.
மீதமுள்ள 6 பேரை தான் இன்று (14-8-19) நீதிமன்றம் ஆதாரம் போதவில்லை என்ற பெயரில் விடுவித்துள்ளது. இதற்கு காரணம்: சாட்சியங்களின் முரண்பாடு , முன்னர் சாட்சியம் அளித்தவர்கள் தற்போது மறுத்து சாட்சியம் அளிப்பது , சந்தேக பயனை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதுவே .
எனினும் விடுவிக்கப்பட்ட அதே 6 நபர்களையும் பெஹ்லு கான் தாக்கப்படும் வீடியோவில் தெளிவாக காண முடிகிறது.
பசு தீவிரவாதிகள் என்று சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட வீடியோவில் இருந்த அந்த ஆறு நபர்களும் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தவுடன் கோர்ட் வளாகத்திற்குள் இருந்த நபர்கள் “பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டனர்.
பெஹலு கானின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிக்கை வழங்கியிருந்தனர். இதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட ஒரு காரணமாக அமைந்தது.
பின்வாங்கிய சாட்சிகள்:
இந்த வீடியோவை தன் மொபைல் போனில் பதிவு செய்த நபர் குற்றவாளிகளை காட்டிக் கொடுக்கவில்லை. சாட்சி கூற மறுத்துவிட்டார். அதேபோல் வீடியோவை பதிவு செய்த மற்றொரு நபர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார்.
பெஹலு கான் கொலை வழக்கில் மொத்தம் 2 முதல் தகவல் அறிக்கை (FIR)பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று பெஹ்லூ கான் மற்றும் அவரது மகன்களை தாக்கியவர்கள் மீது. மற்றொன்று பெஹ்லூ கான் மற்றும் அவரது மகன்கள் மீது, சரியான ஆவணம் இன்றி பசுக்களை ஏற்றிச் சென்றதாக கூறி முதல் தகவல் அறிக்கை (FIR)பதிவு செய்யப்பட்டது.
விடுவிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல !
முன்னதாக கடந்த 2017 இல் பெஹலு கான் மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்ட 6 நபர்களும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் அவர்கள் இருக்கவில்லை என்றும் அவர்கள் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறி விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 6 நபர்களில் ஒருவன் விபின் யாதவ். இவன் என்டிடிவி யின் ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ வசமாக சிக்கினான். என்டிடிவி வெளியிட்ட அந்த வீடியோவில், தான் எப்படி ஒரு பெரும் கும்பலை அழைத்துச் சென்று பெஹ்லுகானை அடித்து கொலை செய்தோம் என்பதை மிகவும் பெருமையாக கூறி இருப்பான்.
ராஜஸ்தான் காவல்துறையினர் இந்த வீடியோவின் அடிப்படையில் யாதவின் பிணையை (பெயில்) ரத்து செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கோரினர். ஆனால் ராஜஸ்தான் உயர் நீதி மன்றமோ அப்பட்டமாக, யாதவ் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் அந்த வீடியோவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
பெஹ்லு கானின் வழக்கறிஞர் இதே வீடியோவை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வரும் பொழுதும் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
இராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை), ராஜீவா ஸ்வரூப் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி , நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.
நெட்டிசன்கள் புதிய இந்தியாவில் வெளிவரும் நீதி மன்ற தீர்ப்புகளை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்,