Indian Economy

ரூ.20,000 கோடி செலவில் புதிய பாராளுமன்றம், பிரதமர் வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்ட மோடி அரசு முடிவு; ஆனா அதற்கான பணம் இல்லை..

இந்திய பொருளாதாரம் படுமோசமான நிலையில் சரிந்து சென்று கொண்டுள்ள நிலையில் மோடி அரசு மத்திய விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தை ( Central Vista revamp plan) கடந்த ஆண்டு அறிவித்தது. அது என்ன திட்டம் என்று கேட்கிறீர்களா?

20,000 கோடி செலவில் திட்டம் :

புதிய முக்கோண வடிவிலான நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கான புதிய குடியிருப்புகள் மற்றும் சாஸ்திரி பவன், நிர்மன் பவன், உத்யோக் பவன், கிருஷி பவன், வாயு பவன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 10 புதிய கட்டிடங்களையும் கட்டும் திட்டத்தின் பெயரே மத்திய விஸ்டா மறுசீரமைப்பு திட்டம்.

இவை அனைத்தையும் கட்டி முடிக்கும் செலவு 20,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதற்கான தொகை மத்திய அரசிடம் இல்லை.

யார் கட்டுவது?

குஜராத்தை சேர்ந்த பிமல் படேலின் நிறுவனமான எச்.சி.பி டிசைன்ஸ் தான் இந்த அனைத்து கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. கடந்த ஆண்டே அறிவிக்க பட்ட இந்த திட்டத்திற்கு இந்த பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை.

பணத்திற்கு என்ன செய்ய?:

கையில் பணம் இல்லை ஆனா மோடியின் விருப்ப திட்டமான இதை நிறைவேற்றி ஆக வேண்டுமே என நிதி அமைச்சகம் விழிபிதுங்கி உள்ளதாக தெரிகிறது. கட்டிடங்களை அந்தந்த துறைக்கான அமைச்சகமே செலவிட்டால் நலம் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது சாத்தியமில்லை. அப்படி செய்தால் திட்டமிட்டது போல 2022 க்கு முன்னர் பாராளுமன்றத்தையோ, 2024 க்கு முன்னர் மற்ற கட்டிடங்களையோ கட்டி முடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாக தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.

எனவே இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தாக வேண்டும், அப்போது தான் திட்டமிட்டது போல, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வேலை ஆரம்பிக்க முடியும் என தெரிகிறது.

தற்போதுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

1931 ஆம் ஆண்டில் பிரபல பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கர் வடிவமைத்த தற்போதுள்ள பாரம்பரிய இந்திய பாராளுமன்ற கட்டிடம் இடிக்கப்படாது. அலுவலகங்கள் புதிய இடத்திற்கு மாறும் அதே வேளையில், தற்போதுள்ள கட்டிடங்கள் இரண்டு அருங்காட்சியகங்களாக மாற்றப்படும்.பிரதமருக்கான புதிய குடியிருப்பு ராஷ்டிரபதி பவனின் தெற்குப் பகுதியில் கட்டப்பட உள்ளது.