Kashmir

காஷ்மீர்! :”எங்கள் குழந்தைகள் சிறையில் வாடுகின்றனர்” – கண்களை ஈரமாக்கும் “தி வாஷிங்க்டன் போஸ்டின்” களநிலவரம்!

கீழுள்ள ஆக்கம் உலக புகழ் பெற்ற ஊடகவியலாளர் ரனா அயூப் “தி வாஷிங்க்டன் போஸ்டில் ” வெளியிட்ட ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு.

ஆகஸ்ட் 6 அன்று, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த சில நாட்களில், 13 வயதான முஹமது ஆஷிக், தனது தந்தை ஈத் பெருநாளிற்கு பலியிடுவதற்காக வீட்டிற்கு கொண்டு வந்த ஆட்டுக்குட்டியுடன் விளையாடிய பின்னர் தனது வீட்டு தரையில் போடப்பட்டிருந்த கம்பளத்தின் மீது தூங்கச் சென்றார். இன்னும் ஒரு வாரத்தில் பெருநாள். அன்று இரவு , அவரது வீட்டின் கூரையின் மேலிருந்து தொடர்ந்து ஏதோ அலறல் ,சில சப்தங்கள் கேட்டு கொண்டே இருந்தது.

சீருடையில் ஒரு குழுவினர் தங்கள் வீட்டினுள் நுழைவதற்கு முன்பாக அவரது தாயார் ஆஷிக்கின் அருகில் விரைந்தார். அவரது தந்தை யூனுஸ் முஹமது, நான் சமீபத்தில் காஷ்மீருக்குச் சென்றபோது ஒரு நேர்காணலில் என்னிடம் சொன்னார்… முகத்தில் சிவப்பு முகமூடியுடன் ஒரு நபர் உள்ளே நுழைந்தார், அதைத் தொடர்ந்து 30க்கு நெறுக்கமான ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் வீட்டினுள் புகுந்தனர்.. 6 அல்லது 7 போலீஸ் வேன்கள் வீட்டிற்கு வெளியே நின்றன. “அவர்கள் என் மகனை என் மனைவியின் கைகளிலிருந்து இழுத்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள்.கல் வீசுபவர்களின் இருப்பிடத்தை காட்டி கொடுக்கும்படி அவர்கள் தொடர்ந்து அடித்தனர்.” என்று முஹமது கூறினார்.

வீட்டை விட்டு வெளியே இழுத்து செல்லப்பட்ட ஆஷிக் போலீஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டான்,வேனும் இருளில் மறைந்தது.மறுநாள் காலையில், அவரது தந்தை காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ஆஷிக் இரவு முழுவதும் அழுததனால் கண்கள் சிவந்து போயிருத்ததை கண்டார்.. அதிகாரிகள் தனது கைகளை ஒரு கம்பத்தில் கட்டி, இரவு முழுவதும் ஒரு பிரம்பால் அடித்ததாக சிறுவன் ஆஷிக் தனது தந்தையிடம் கூறினார்.

நான் ஆஷிக் வீட்டை அடைந்தபோது, அவரது பெற்றோர் பேச தயங்கினர். பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, அவர்கள் வெளியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆஷிக்கை அழைத்தனர். சிறுவன் வியர்வையில் நனைந்த தனது டி-ஷர்ட்டை கழற்றி , தனது முதுகில் இருந்த வெட்டுக்களையும், காயங்களையும் காட்டினார்.

அவரது தந்தை காயம் உள்ள அடையாளங்களில் ஒன்றைத் தொட முயற்சிக்கும்போது அவர் வலியால் கத்துகிறார். “நான் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அன்றைய இரவில் எஸ்.பி. சாஹேப் (காவல் கண்காணிப்பாளர் ) என்னை அடித்தார்,” என்று சிறுவன் என்னிடம் கூறினான். “நான் அழைத்து செல்லப்பட்ட வேனில் மற்ற சிறுவர்களும் இருந்தனர். நான் பள்ளியில் 8ம் வகுப்பில் படிக்கிறேன், போராட்டங்களைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் சொன்னபோதும், அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் அடித்து கொண்டே இருந்தனர்.. ”

பழக் கடையை நடத்தி வரும் ஆஷிக்கின் தந்தை, காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க விரும்புவதாகக் கூறினார் – ஆனால் காஷ்மீரை விடுவிப்பதாக கூறி கொண்டு, ஒவ்வொரு காஷ்மீரியையும் நசுக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கத்திடமிருந்து நீதி ஒரு போதும் கிடைக்காது என்று அவருக்குத் தெரியும். 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர், சிறுவன் ஆஷிக் உடல் மற்றும் உளவியல் வடுக்களுடன் விடுவிக்கப்பட்டான், இதை அந்த சிறுவன் தனது வாழ்நாள் முழுவதிலும் சுமப்பான். ஈது பெருநாளிற்காக பலியிடக் கொண்டுவரப்பட்ட ஆட்டுக்குட்டி இன்னும் வராண்டாவில் கட்டப்பட்டேயிருந்தது.

காவல் நிலையத்திற்கு வெளியே பெற்றோர் குமுறல்:

ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் காவல் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு கணமேனும் பார்த்து விடவேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். கண்களில் இருந்து நீர் வடிய ..தங்கள் குழந்தைகளுக்காக உணவை கொண்டு வந்த பெற்றோர்களை காவலர்கள் முற்றிலும் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர்.

“குறைந்தபட்சம் என் மகன் உயிருடன் இருக்கிறானா என்பதையாவது சொல்லுங்கள்” என்று ருக்ஷனா கேட்கிறார் . இவரது 18 வயது மகனும் மெஜ்ஜு நகரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆகஸ்ட் 4 , பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டத்தில் இருந்து , 3,000 க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் – அவர்களில் பலர் குழந்தைகள், ஒரு மாதமாகிவிட்டது. அவர்களின் எதிர்காலம் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. பயமும் எதிர் காலத்தை குறித்த அச்சமும் பள்ளத்தாக்கு முழுவதிலும் ஊடுருவியுள்ளது.

இந்திய ஊடகங்களின் மீதான காஷ்மீர் மக்களின் கட்டுக்கடங்கா கோபம் !

நாங்கள் புல்வாமா செல்லும் வழியில் பரிகாம் என்ற பகுதியை கடந்து சென்றோம் / ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலத்தையும் துப்பாக்கிகள் மற்றும் வேலி கம்பிகள் மூடி கொண்டுள்ளது. ஒவ்வொரு அங்குலத்திலும் மத்திய துணை ராணுவப் படையினர் உள்ளனர். நாங்கள் பல்வேறு சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டோம். பொதுமக்கள் நடமாட்டம் அவசரகால சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களை சுற்றி வெறிச்சோடிய சாலைகள் மட்டுமே காணமுடிந்தது. சமீபத்தில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் முசாபர் அஹமது என்பவர் பற்றி பரிகாமில், ஒரு உள்ளூர்வாசியிடம் கேட்டோம்.பூட்ட பட்டிருந்த தனது செல்போன் கடைக்கு முன்னால் நின்றிருந்த அவர் : “நீங்கள் ஊடகத்திலிருந்து வந்தவரா?” என்று எங்களை நோக்கி கேட்டார்.

நாங்கள் ஆம் என்று பதிலளித்தோம், அவர் எங்கள் டிரைவரைக் நோக்கி திட்ட ஆரம்பித்தார், எங்களை வெளியேறச் சொன்னார். “உங்களுக்கு கொஞ்சமாவது வெக்கம் இருக்கிறதா ?” என்று எங்களை நோக்கி கோபமாக கேட்டார் . “இங்கு நாங்கள் கொல்லப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கொண்டு இருக்கும்போது இங்கே இயல்பு நிலை திரும்பி விட்டது என்று பத்திரிகையாளர்காளான நீங்கள் தொலைக்காட்சியில் கூத்தடிக்கிறீர்கள். எங்கள் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள், காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அனைவரும் இங்கு மகிழ்ச்சியாக உள்ளனர், எல்லாம் நன்றாக உள்ளது என்று உலகத்திற்கு செய்தி வெளியிடுகிறீர்கள்.”

இந்திய ஊடகங்கள் காஷ்மீரில் சந்தேகத்துடனும் கோபத்துடனும் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வ அரசாங்க பொய்களை வெறுமனே வழிமொழிவதையே ஊடகம் என்ற பெயரில் செய்து வருகின்றனர். உள்ளூரில் பேக்கரி வைத்துள்ள குல்பம் வாணி என்னிடம் கேட்டார், ” இந்திய ஊடகங்கள் .. ஒவ்வொரு நாளும் காஷ்மீரிகளான எங்களுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து விட்டு , எப்படி தூங்க முடிகிறது ?”

முதுகெலும்பு முறிக்கப்பட்டும் தொழ முடியவில்லையே என்பதற்க்காக வருந்தும் அஹமத் !

சில மைல்களுக்கு முன்னே, நான் முசாபர் அஹமதை சந்தித்தேன். அவருக்கு வயது 20, தனது தந்தை மற்றும் சகோதரருடன் பரிகாமில் உள்ள உள்ளூர் பேக்கரியில் வேலை செய்கிறார். காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவான ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று வீட்டு கதவைத் தட்டினர் என்று அவரது தந்தை ஷப்பீர் எங்களிடம் கூறினார். அவர்கள் இந்திய இராணுவம் பயன்படுத்தும் கனரக வாகனத்தில் வந்திருந்தனர். அவர்கள் அவரது வீட்டின் ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர். அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாக முசாபர் என்னிடம் கூறினார். 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டைக் கொள்ளையடித்தனர்.

அவர்கள் குடும்பத்தின் மீது வசை சொற்களை பொழிந்தனர். அவர்களில் ஒருவர் முசாபரை கழுத்தில் பிடித்து, “உன் கூட்டாளிகள் எங்கே?” என்று கேட்டார். பின் முசாபரை உள்ளூர் மசூதிக்கு இழுத்துச் சென்று, அதில் கற்களை வீசச் சொன்னார். முசாபர் மறுத்தபோது, ​​அவர்கள் அவரை மீண்டும் அடித்தனர். ” நீங்கள் எங்களை நோக்கி கற்களை எறிவது போல,மசூதியின் மீது கற்களை எறியுங்கள்” என்று அவர் முஸாபரை நோக்கி கூறியதாக என்னிடம் கூறினார்.

(எங்கள் பணி தொடர்ந்து நடந்திட- உதவிடுங்கள் !)

அஹமத் சகோதரர்கள் இருவரையும் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு 2 மணி நேரம் அடித்துள்ளனர்.. அங்கு சென்றதும், அவர்கள் மூங்கில் குச்சியால் மணிக்கணக்கில் தாக்கப்பட்டதாக முசாபர் என்னிடம் கூறினார். அடிதாங்காமல் மயங்கி விழும்போது மின்சாரம் பாய்ச்சி சுயநினைவை வரச்செய்துள்ளனர். அவர் எரிந்த போன தனது தோலை எனக்குக் காட்டுகிறார். இரண்டு சகோதரர்களும் 20 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, ஷப்பீர் அவர்களை ஒரு டெம்போவில் வைத்து ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். முதுகெலும்பில் இப்படி தாக்குதல் செய்யப்பட்டும் அவரது மகன் உயிர் பிழைத்துள்ளது ஆச்சரியம் தான் என்று மருத்துவர் சொன்னார். உள்ளூர் மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் முசாபர் உடைந்து போனார்: “அவர்கள் என் எலும்புகளை உடைத்துவிட்டார்கள்; நான் அல்லாஹ்வின் முன் வளைந்து ஸஜ்தா (சிரவணக்கம்)செய்ய முடியாது. ”

அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? என்று கேள்விக்கு இன்னமும் பதிலை தேடி கொண்டுள்ளார்… அவர் ஒருபோதும் ஒரு போராட்டத்திலும் பங்கேற்கவில்லை என்றார். முற்றிலும் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனது இரண்டு மகன்களை வைத்து கொண்டு தனது குடும்பம் எப்படி இனி உயிர் வாழும் என்று அவர்களின் தந்தை இடிந்து போயுள்ளார்..

முசாபரின் தாய் என்னை வீட்டிற்குள் அழைத்தார். தன் மருமகளை என்னால் பாதுகாக்க முடியுமா? என்று கேட்டார். “அவர்கள் குடிபோதையில் இருந்தார்கள், அவர்கள் என் மருமகளை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்,” என்று அவர் அதிகாரிகளைப் பற்றி கூறினார். “அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.” என்றார்.

4 நாட்கள் காஷ்மீரில் கழித்த பின்னர் இவை அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்த டெல்லிக்கு புறப்பட்டேன். . நான் கடந்த 15 ஆண்டுகளாக காஷ்மீருக்கு சென்று கொண்டிருக்கிறேன், ஆனால் இந்திய அரசு மீதான இந்த அளவு மனக்கசப்பையும் கோபத்தையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. காஷ்மீரிகளிடம் தங்கள் குழந்தைகளை பாதுகாத்திட பள்ளத்தாக்கிலிருந்து அனுப்ப விரும்புகிறீர்களா? என்று கேட்டேன். அவர்கள் சிரித்தனர்.

“நாட்டின் பிற பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள் மீது காட்டப்படும் வெறுப்பைப் பாருங்கள். அவர்கள் காஷ்மீரிகளை வாழ அனுமதிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ”ஆஷிக்கின் தந்தை என்னிடம் கேட்கிறார். ” உங்கள் இந்தியாவில் கல்லூரிகளில் இருந்தும் , வீடுகளிலிருந்தும் எங்கள் குழந்தைகள் வெளியேற்றப்படுகிறார்கள்.” (இந்த மாதம், 24 வயதான காஷ்மீரி மருத்துவர் ஒருவருக்கு தில்லியில் ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.காரணம் ? அரசாங்கத்திடமிருந்து செய்தி கிடைத்துள்ளதாக கூறி தனது வாட்ஸ்அப் மெசேஜை (fake news) மேற்கோள் காட்டியது நிர்வாகம்).

எள்ளி நகையாடப்படும் ரனா !

நான் காஷ்மீரில் இருந்து திரும்பிய பின்னர் அங்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து ட்வீட் செய்தேன் . அது மிக பெரும் விவாத அலையை ஏற்படுத்தியது . ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் இம்தியாஸ் உசேன் எனது ட்வீட்டை “ஆதாரமற்றது , அபாயகரமானது ” என்று கூறினார்.கடந்த 3 வாரங்களில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் பிபிசி உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்திகளை ஹுசைன் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரம் என்று கூறி வருகிறார்.

ஹுசைனைப் போலவே இந்தியாவும் தொடர் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 8 மில்லியன் மக்களின் துன்பத்தை உதாசீனப்படுத்தகிறது.காஷ்மீர் மக்கள் கடும் துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் இடையில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் வேலையில், இந்தியர்கள் தங்கள் வீட்டு அறைகளில் ஆனந்தமாக தொலைக்காட்சி செய்திகளை பார்த்து கொண்டு “ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு” உண்டாகியுள்ளது .. இது அரசின் ஒரு மிக பெரும் “வெற்றி” என்று வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

Courtesy and Source: The Washington Post

எங்கள் பணி தொடர்ந்து நடந்திட- உதவிடுங்கள் !