டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை ‘ஸ்வயராஜ் அபியான்’ நிறுவனர் பேரா.யோகேந்திர யாதவ் எழுதியதுதான். டெல்லியில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டதும் பாதிக்கப்பட்டதும் நரேந்திர மோடிதான் எனத் தொடங்குகிறது அவரது கட்டுரை
சுமார் 49 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அத்தனை பேரும் அப்பாவி முஸ்லிம்கள். அது குறித்து இவர் எழுதுகிறார்: “போலீசுக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்குமான மோதலாகத்தான் இது தொடங்கியது. பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலுக்குப் பின்பே அது ஒரு இந்து முஸ்லிம் வன்முறையாக மாறியது”
என்ன நெஞ்சழுத்தம்! இந்த வன்முறைகளின் தொடக்கம் மற்றும் இதற்கான சதித்திட்டம் ஆகியவற்றிம் பாஜகவிற்குப் பங்கே இல்லையாம். ஆர்பாட்டக்காரர்கள், அதாவது முஸ்லிம்களும் போலீசும் மோதிக் கொண்டதுதான் தொடக்கமாம். டெல்லி அமர்வுப் போராட்டம் குறித்து அனைவரும் சொல்வது அது எத்தனை அமைதியாகவும், வன்முறை இன்றியும், கட்டுப்பாட்டுடனும் முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது என்பதுதான். அதைப் போய் இவர் முஸ்லிம்களுக்கும் போலீசுக்குமான கலவரமாகத் தொடங்கியது எனச் சுருக்குவதன் நோக்கம் என்ன?
இந்த வன்முறை டெல்லி முழுவதும் பரவாமல் வட கிழக்கு டெல்லிக்குள்ளேயே “தடுத்து நிறுத்தப் பட்டதற்காகப்” பாராட்டு வேறு. போராட்டம் வட கிழக்கு டெல்லியை மையப்படுத்தித்தான் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு வன்முறைகளை மேற்கொண்டு போராட்டத்தை ஒடுக்குவதுதான் கலவரக்காரர்களின் நோக்கம். இதை “வட கிழக்கு டெல்லிக்குள்ளேயே” ஒடுக்கப்பட்டது என இவர் யாரைப் பாராட்டுகிறார். மோடி அரசையா? இல்லை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசையா?
கலவரக்காரர்கள் துரத்தப்பட்டார்களாம். நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான 24×7 அமைப்புக்கு யார் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உதவி கேட்டாலும் அடுத்த நிமிடம் உதவி பறந்து வந்ததாம். சொல்கிறார் யோகேந்திரர்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் மகனும் இன்றைய சிரோமணி அகாலிதள் கட்சியின் எம்.பியுமான நரேஷ் குஜ்ரால் அவர்களின் கருத்து ஆங்கில இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. 26ம் தேதி இரவு 16 முஸ்லிம்கள் கோண்டா சவுக்கில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மாட்டிக் கொள்கின்றனர்.
வெளியே கலவரக் கும்பல் கதவை இடிக்கிறது. அவர்கள் எல்லோரிடமும் தகவல் சொல்லிப் பார்த்துவிட்டு, எதுவும் பலனில்லாமல், கடைசியாக குஜ்ராலை போனில் தொடர்பு கொள்கின்றனர். அவர் உடனடியாக இந்தப் போலீசைத் தொடர்பு கொண்டு (அவசர போலீஸ் உதவி எண் 100 உட்பட) புகார் செய்கிறார். புகார் பதிவும் செய்யப்பட்டது. ஆனால் எந்த உதவியும் அவர்களுக்குக் கிட்டவில்லை. டெல்லி லெப்டினண்ட் கவர்னர் அனில் பைஜாலும் சரி, டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கும் சரி யாரும் உதவவில்லை.
கடைசியாக அருகில் குடியிருந்த ‘இந்து மக்கள்’தான் அவர்களைக் காப்பாற்றி பாதுகாப்புடன் அனுப்பியுள்ளனர். நிலைமை இப்படி இருக்க யோகேந்திர யாதவுக்கு என்ன ஆச்சு இப்படி மோடி அரசின் போலீசைக் கொண்டாட?
போலீசை யாதவ் விமர்சிக்கிறார்..எப்படித் தெரியுமா?
போலீசுக்கு ஆளெடுப்பது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறதாம். அவர்களுக்கான பயிற்சியும் தரமானதாக இல்லையாம். காவல்துறை நீதித்துறை எல்லாம் இங்கே பெரிய அளவில் திட்டமிட்டு காவி மயப் படுத்தப்படுகிறது. பெரிய அளவில் சங்கிகள் இவற்றில் நிரப்பப்படுகின்றனர். அதையெல்லாம் சுட்டிக் காட்டாமல் ‘காவல்துறைக்குக் கொடுக்கப்படும் ட்ரெய்னிங்’ சரியில்லை என்றால் என்ன சார் இது..?
யாதவ் ரொம்ப ரொம்ப பெருந்தன்மையாக இந்தக் கட்டுரையில் சொல்வது என்ன தெரியுமா? இந்தக் கலவரம் முஸ்லிம்களின் சதித்திட்டம் எனச் சிலர் சொல்கிறார்களாம், ஆனால் அப்படி எல்லாம் இல்லையாம்.
முஸ்லிம்கள்தான் இந்தக் கலவரச் சதிக்குக் காரணம் என ஆர்.எஸ்.எஸ் காரன் கூடச் சொல்லவில்லை. முஸ்லிம்கள் தங்கள் தலையில் பெற்றோலை ஊற்றிக் கொளுத்திக் கொள்வதற்கு அவர்கள் என்ன முட்டாள்களா?
கடைசியாக விஷயத்துக்கு வருகிறார் யாதவ். மோடிக்குத் தெரியாமல் இது நடந்திருக்கிறதாம். ட்ரம்ப் வந்திருக்கும் வேளையில் இப்படியான ஒரு தாக்குதலை ஒரு பிரதமர் விரும்புவாரா? – நரேந்திர மோடி அப்பாவி என நிறுவுவதற்கு யாதவ் வைக்கும் ஒரே ஆதாரம் இதுதான். ஒன்று நினைவிருக்கட்டும் மோடி, ட்ரம்ப் இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
முஸ்லிம் வெறுப்பில் சளைத்தவர்கள் அல்ல :
முஸ்லிம் வெறுப்பு என்பதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இரண்டாம் முறையாக மோடி பதவியில் அமர்ந்த பின் இங்கு எத்தனை அநீதிகள் நடந்துள்ளன. எதையும் ட்ரம்ப் கண்டித்ததில்லை. காஷ்மீரை இன்று ஒரு சிறைச்சாலையாக மாற்றி வைத்துள்ள விஷயத்தில் கூட தான் சமரசம் பேசுகிறேன் எனச் சொல்கிறாரே ஒழிய எந்நாளும் அவர் நரேந்திர மோடியைக் கண்டித்ததில்லை.
மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை பெர்னி சாண்டர்ஸ் மட்டுமல்ல ஜெர்மன் அதிபர் ஆங்கெலா மார்கெல், ஐ.நா அவை எல்லாம் கண்டித்துள்ளது.
ஆனால் இரண்டு நாள் விருந்தை எல்லாம் அனுபவித்துவிட்டு ஊருக்குக் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் இந்த வன்முறைகள் பற்றிக் கேட்டப்போது, “அதை இந்திய அரசு கவனித்துக் மொள்ளும்” எனச் சொல்லி அகன்றவர் ட்றம்ப்.
யோகேந்திர யாதவும் சரி, அர்விந்த் கெஜ்ரிவால் இவர்கள் எல்லாம் பன்மை இந்தியா, மத்தச்சார்பின்மை ஆகியவற்றை அதற்குரிய முக்கியத்துவத்துடன் அணுகாதவர்கள். இவர்களின் அரசியலில் இதெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.,
பின் குறிப்பு: கடைசியாக இக் கட்டுரையை யாதவ் எப்படி முடிக்கிறார் தெரியுமா? இது ஒரு auto driven violence ! அதாவது தானே தூண்டிக் கொண்ட ஒரு கலவரமாம். நல்ல வேளை முஸ்லிம்கள் தன்னைத் தானே கொன்றுகொண்டார்கள் எனச் சொல்லாமல் போனாரே!
ஆக்கம்: அந்தோணி