BJP CAA

“அம்பேத்கரின் அரசியலமைப்பை பின்பற்றுங்கள் அல்லது கிழித்து எறியுங்கள்” ; சிஏஏ, என்ஆர்சி திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் பாஜக எம்.எல்.ஏ !

மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய தொடர் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்நிலையில் பாஜக வை சேர்ந்த சொந்த கட்சி எம்எல்ஏ ஒருவரே தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து “நாட்டின் ஒவ்வொரு வீதியிலும் உள்நாட்டு போர் ஏற்பட்டது போல் உள்ளது” என கூறியுள்ளது பாஜகவை கலங்கடித்துள்ளது.

சி.ஏ.ஏ நாட்டிற்கு பயனளிக்கவில்லை என்றாலும், சர்ச்சைக்குரிய நடவடிக்கை பாஜகவின் வாக்கு வங்கியை பலப்படுத்தும் என பா.ஜ.க எம்.எல்.ஏ நாராயண் திரிபாதி வெளிப்படையாக கூறியுள்ளார்.

பின்பற்றுங்கள் அல்லது கிழித்தெறியுங்கள்:

ஒன்று பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை பாஜக பின்பற்ற வேண்டும் இல்லையானால் “அதை கிழித்து எறிந்து விடுங்கள்”, ஏனெனில் மத அடிப்படையில் தேசத்தை பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவான ஒரு விஷயம் என அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு போர் போல் காட்சி அளிக்கிறது:

ஒவ்வொரு தெருவிலும் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமை உள்ளது, இது நம் நாட்டுக்கு ஆபத்தானது. உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை நிலவும் நிலையில் நாட்டில் வளர்ச்சியை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இது பற்றிய நிலைமையை நான் அறிந்துகொண்ட உடன் அதை (சிஏஏ) எதிர்த்தேன். எனது தொகுதியான மைஹாரில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது ”என்றார்.

“மக்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் என கூறும் பி.ஆர் அம்பேத்கரின் அரசியலமைப்புப்படி பாஜக இந்த நாட்டை வழிநடத்த வேண்டும். இல்லையென்றால் அதை கிழித்து எரிந்து விட்டு ஒரு புது அரசியல் சாசனத்தை பாஜக முன்மொழிய வேண்டும். நம் நாடு மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதை ஏற்கமுடியாது” என்று மைஹார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறினார்.

நாங்கள் தொடர்ந்து செயல்பட உதவுங்கள்

கட்சி தாவும் திட்டமா?:

இவர் பேசுவதை பார்த்தால் கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துவிடுவார் போல என விமர்சனங்கள் எழ அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் “நான் காங்கிரசில் சேரத் தயாராக இல்லை, நான் பாஜகவை விட்டு வெளியேறவில்லை. பா.ஜ.க.வுக்கு நன்மை பயக்கும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே சி.ஏ.ஏ இயற்றப்பட்டது. இது நாட்டிற்கு பயனளிக்கப் போவதில்லை. இது என் உணர்வுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் கூறப்படும் தனிப்பட்ட கருத்தாகும் ” என்றார் நாராயண் திரிபாதி.

நாடு தழுவிய என்ஆர்சி திட்டத்திற்கும் எதிர்ப்பு:

நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தும் திட்டத்தையும் நான் எதிர்க்கிறேன், “கிராமங்களில் உள்ளவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது” என்று கூறினார் திரிபாதி..

ரேஷன் கார்டுகே வழியில்லாத மக்கள்:

கிராம மக்கள் ரேஷன் கார்டைப் பெற போராடும்போது, அவர்கள் எவ்வாறு குடியுரிமையை நிரூபிக்க முடியும்? நீங்கள் (பிஜேபி) ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பற்றி பேசுகிறீர்கள், ஆனால் அதே சமயம் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறீர்கள்.”

பாஜக வை எதிர்ப்பது இது முதல் முறை அல்ல:

திரிபாதி கட்சிக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய பிரதேச சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் சட்ட திருத்த மசோதா தொடர்பாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக திரிபாதி மற்றும் அவரது சகா பியோஹரி எம்.எல்.ஏ சரத் கோலுடன் இணைந்து வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிபாதி மட்டுமல்ல:

CAA ஐ வெளிப்படையாக கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் திரிபாதி மட்டுமல்ல. பாஜகவின் மேற்கு வங்க மாநில துணைத் தலைவர் சந்திரபோஸும், முஸ்லிம்களை CAA இல் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். “இன்று நம்மிடம் மெஜாரிட்டி இருக்கிறது என்ற காரணத்தால் பயங்கரவாத அரசியலை செய்ய முடியாது ” என்றும் அவர் கூறி இருந்தார்.

நாங்கள் தொடர்ந்து செயல்பட உதவுங்கள்