சிவ சேனா கட்சி நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி கட்சியினரிடம் உரையாற்றினார் உத்தவ் தாக்கரே. நமது பழைய கூட்டாளிகள் நம்மை முதுகில் குத்திவிட்டனர். நான் இந்துத்துவா கொள்கையை விட்டுவிடவில்லை. எனது நிறத்தையும் மாற்றி கொள்ளவில்லை என அவர் பேசியுள்ளார்.
பாஜகவின் நம்பிக்கை துரோகம்:
“நம் பழைய கூட்டாளிகள் நமது முதுகில் குத்திவிட்டதால் தான் நாம் இந்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் (பாஜக) நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். நான் பொய் சொல்வதாகவும், என்னை ஒரு பொய்யனாக நிரூபிக்கவும் அவர்கள் முயற்சித்தார்கள். நான் வேறு பாதையை தேர்ந்து எடுத்து கொண்டேன். யாருக்கு எதிராக போராடி கொண்டிருந்தோமோ அவர்களுடன் கைகோர்த்து கொண்டோம். .. இதனால் நான் இந்துத்துவாவை விட்டு வெளியேறினேன் என்று அர்த்தமல்ல, நான் எனது நிறத்தையும் மாற்றி கொள்ளவில்லை.”
தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி:
“என்றேனும் ஒரு நாள் சிவ சேனாவை சேர்ந்த ஒருவர் மாநில முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று நான் மறைந்த பாபாசாகேப் தாக்கரேக்கு வாக்குறுதி அளித்த பழைய நாட்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக உணர்கிறேன். இது எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முதல் படியாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் அவர்கள் (பாஜக) நம்பிக்கை துரோகம் செய்தனர். நான் முதலமைச்சராக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் வேறுபட்ட சூழ்நிலை எழுந்தது, எனவே நான் மாநில முதல்வராக ஆக முடிவு செய்தேன்”
இவ்வாறு உத்தவ் தாக்ரே தனது கட்சியினர் கூட்டத்தில் பேசினார்