தங்கள் சொந்த நாட்டில் போதுமான அளவுக்கு உணவு இல்லாததால் பங்களாதேஷின் ஏழை மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்து கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமையன்று இதற்கு பதிலளித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் பங்களாதேஷ் குறித்த உள்துறை அமைச்சரின் அறிவு “ சிறிய அளவில்” உள்ளது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் “குறிப்பாக பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் கூறினார். இத்தகைய கருத்துக்கள் தவறான புரிதலை உருவாக்குகின்றன. ” எனவும் அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு இந்திய ஊடகங்களில் வெளியான அமித் ஷாவின் கருத்துக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது மோமன் கருத்து தெரிவித்தார். பங்களாதேஷின் முன்னணி வங்காள நாளேடான புரோத்தோம் அலோவுக்கு கருத்து தெரிவித்த பங்களாதேஷ் அமைச்சர், “இந்த உலகில் பல புத்திசாலிகள் இருக்கிறார்கள், சிலர் பார்த்த பிறகும் பார்க்கதவர்களாக உள்ளார்கள், அறிந்த பிறகும் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளார்கள், ஆனால், அவர் (அமித் ஷா) அப்படிச் சொல்லி இருந்தால், நான் சொல்வேன் பங்களாதேஷைப் பற்றிய அவரது அறிவு குறைவாகவே உள்ளது என்று, பங்களாதேஷில் யாரும் பசியால் இறக்கவில்லை.” என அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ளார்.
பல துறைகளில், அமித் ஷாவின் நாட்டை விட பங்களாதேஷ் மிகவும் முன்னிலையில் உள்ளது என்று மோமன் கூறினார்.
“இப்போது கூட பங்களாதேஷின் ஏழை மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள், ஏனெனில் இப்போது கூட தங்கள் சொந்த நாட்டில் உணவு போதுமானதாக இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பங்களாதேஷில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்படும்” என்று அமித் ஷா பேசினார்.
“பல சமூக குறியீடுகளில் பங்களாதேஷ் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டிய மோமன், பங்களாதேஷில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் தரமான கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள், இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு சரியான கழிப்பறைகள் கூட இல்லை.” என மொமென் தெரிவித்தார்.
பங்களாதேஷில் அதிகம் படித்தவர்களுக்கு வேலை பற்றாக்குறை உள்ளது, ஆனால் குறைந்த அளவில் படித்தவர்களுக்கு இத்தகைய பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் கூறினார். தவிர, பங்களாதேஷில் இந்தியாவில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். “எனவே நாங்கள் இந்தியா செல்ல எந்த தேவையுமில்லை” என்று அவர் கூறினார்.