NIA அமைப்பு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்து வருவது குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 4 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு (NIA ) அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை (?!) கொண்டுவர முயற்சித்ததாகவும் கூறி 14 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து எந்த வித முழுமையான விசாரணையும் நடைபெறாத நிலையிலும் கூட ஆரம்ப கட்டத்திலேயே ,இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி ஊடகங்கள் சிறப்பு கவரேஜ் வழங்கின.
இந்நிலையில் என்.ஐ.ஏ கைது செய்த 14 பேரில் முஹமது இர்ஷாத், ரயீஸ் அஹ்மத், சையத் மாலிக் மற்றும் முஹமது அசாம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். NIA பல்வேறு முயற்சிகள் எடுத்தும் குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க முகாந்திரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் “அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் விசாரணைகள் தொடரும்” என்று என்ஐஏ நீதிமன்றத்தில் கூறியது.
இர்ஷாத் மற்றும் அஹ்மத் ஆகியோர் உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா நகரை சேர்ந்தவர்கள். மாலிக் மற்றும் ஆசாம் ஆகியோர் கிழக்கு டெல்லியை சேர்ந்தவர்கள். இவர்கள் வீடுகளில் இருந்து போது NIA வால் கைது செய்யப்பட்டனர். அப்போது இர்ஷாத் மீது பிரதான குற்றம் சாட்டப்பட்ட முகமது சுஹைல் என்பவருக்கு “ஐ.இ.டி.கள் [மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் குண்டுகளை தயாரிப்பதற்கான பொருளை வைத்திருக்க ஒரு மறைவிடத்தை ஏற்பாடு செய்ய உதவியதாக கூறி குற்றம்சாட்டி இருந்தனர்.ஆனால் அது தற்போது பொய் என தெரியவந்துள்ளது,அதனால் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்னர்.
ராக்கெட் லாஞ்சர்கள் என்று டிராக்டர் உதிரி பாகங்களை கைப்பற்றிய NIA :
அஹ்மத் மற்றும் அவரது சகோதரர் சயீத் “மேம்படுத்தப்பட்ட உயர்ரக குண்டுகள் மற்றும் குழாய் குண்டுகளை” தயாரிப்பதற்காக பெரிய அளவில் வெடி பொருட்களை வாங்கினார்கள் என்று NIA குற்றம் சாட்டியது. “பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக ஒரு ராக்கெட் ஏவுகணை (!) தயாரிப்பதில்” அவர்கள் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டபட்டது. இது மிகப்பெரும் trp கான வாய்ப்பாக மீடியாக்கள் (குறிப்பாக வட இந்திய ஹிந்தி ஆங்கில ஊடங்கங்கள்) பயன்படுத்தி சிறுபான்மை சமூகத்தை தீவிரவாதிகளாக காட்டும் தங்கள் வழக்கமான பணியை புது உத்வேகத்துடன் செவ்வன செய்தன.
ஆனால் சில தினங்களிலேயே என்.ஐ.ஏ ராக்கெட் லாஞ்சர் ஐ கைப்பற்றியது என்று கூறியது டிராக்டரின் பிரஸ்ஸர் நோஸ் என்று தெரியவந்தது.
இது சமூக வலைத்தளங்களில் கேலி பொருளாக பேசப்பட்டு NIA உள் நோக்கத்துடன் தான் செயல்படுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் NIA கைப்பற்றியது தீபாவளி பட்டாசுகள் மட்டுமே என்றும் ராக்கெட் லஞ்சர் என்பது ட்ராக்டர் உபகரணம் என்றும் வக்கீல் தெரிவித்தார்.
இந்த 4 பேரும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லாததால் இவர்கள் அனைவரும் 6 மாத சிறை வாசத்திற்குப் பிறகு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இழந்து விட்ட காலம் என்னவோ திரும்ப போவதில்லை
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கைதான மற்ற 10 பேர் மீது என்.ஐ.ஏ தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், “இவர்கள் 10 பேரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கக்கூடிய மேம்பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க விரும்பினார்கள். தற்கொலை படை தாக்குதல் நடத்தி அதை வீடியோவாக பதிவு செய்து மக்கள் மத்தியில் பரவ விரும்பியதாகவும் “NIA தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த 10 நபர்களும் இவர்களை போன்ற நூற்றுக்கணக்கானோரும் கூட நிரபராதிகளாக தான் இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் இன்னமும் இருக்கும் முப்தி முஹம்மத் சுஹைல், 30, அனஸ் யூனஸ், 21, சுபைர் மாலிக், 22, ரஷீத் ஜாபர் ராக், 24, மு. சாகிப், 26, மு. எம்.டி.பைஸ், 25, மற்றும் நைம் சவுத்ரி, 22 ஆகிய 10 நபர்களும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 4 பேர் கைது செய்யப்படும் போது பரவசத்துடன் செய்தியாக்கி “தீவிரவாதி” பட்டம் சுமத்திய பெரும்பான்மை மீடியாக்களில் இவர்கள் அனைவரும் விடுதலையாகிவிட்ட “நிரபராதிகள்” என்ற செய்தியை மட்டும் ஒரு பெட்டி செய்தியாக கூட போட மறுக்கின்றன .இது கவலைக்குரிய விஷயமாகும்.