Corona Virus Press Freedom

மருத்துவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக வெளியான நியூஸ் 18 செய்தி மாற்றப்பட்ட வினோதம்!

டில்லி AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரினிவாஸ் ராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் “மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற N95 முகக்கவசங்கள், மற்றும் PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படாமை” பற்றியும் நியூஸ்18.காம் இணைய தளத்தில் மே-29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, நடந்தவை என்ன தெரியுமா?

முன்னதாக கடந்த ஏப்ரலில், PPE வாங்க ஒதுக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை PM CARES-க்கு திருப்பிவிட்டது AIIMS நிர்வாகம்.

  • *அச்செய்தி முற்றிலும் உருக்குலைக்கப்பட்டு, AIIMS நிர்வாகத்தின் மறுப்பு மட்டும் வெளியிடப்பட்டது.
  • *மருத்துவர் ராஜ்குமார் அவர்கள் AIIMS-ன் உள்ளிருப்பு மருத்துவர் சங்கம் ( Resident Doctors’ Association )-ல் இருந்து நீக்கப்பட்டார்.
  • *நியூஸ்18 செய்தியாளர் ரஞ்சன் சர்மா ‘தரமற்ற N95 முகக்கவசத்தைக் காட்டி அம்பலப்படுத்திய’ ட்வீட் அழிக்கப்பட்டது.

மே 29ஆம் தேதியன்று நியூஸ்18-ன் செய்தியில், ” AIIMS பணியாளர்கள் பலர் கொரோனாவினால் இறந்துள்ளனர்; ஏற்கனவே 195 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இருநாட்களில் மட்டும் புதிதாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;

பல சுகாதார ஊழியர்களுக்கு PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படாமல், கையுறையும், சாதாரண முகக்கவசமும் மட்டுமே வழங்கப்பட்டது”, போன்ற விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், அடுத்த நாள் மே 30ஆம் தேதி இச்செய்தி முற்றிலும் மாற்றப்பட்டது.

“வைரஸைப் பற்றி அல்ல அரசின் பாராமுகத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறோம்; PPE இல்லாமல் AIIMS சுகாதாரப் பணியாளர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம்” என்ற அசல் செய்தித் தலைப்பே ” தரமான PPE மற்றும் முகக்கவசங்களே வழங்கப்பட்டன; தரமற்றவற்றை வழங்கியதான புகாருக்கு AIIMS மறுப்பு” என மாற்றப்பட்டது.

[மே 29 ஆம் தேதி வெளியான நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் இந்த உண்மைச் செய்தி வந்தது; அது மாற்றமில்லாமலும் நீடிக்கிறது.]

முன்னதாக நியூஸ் 18-க்கு பேட்டி அளித்த போது, ” AIIMS விடுதியின் பாதுகாப்பு, மோசமான சுகாதாரம், முறையற்ற தனிமைப்படுத்துதல், போதுமான அளவு கொரோனா சோதனை செய்வதன் அவசியம் போன்றவை குறித்து AIIMS மருத்துவர்கள் நிர்வாகத்தோடு போராடியே வருகிறார்கள்; ஆனால் பதிலுக்கு AIIMS நிர்வாகம் மிரட்டலில் ஈடுபடுவதோடு, RDA நிர்வாகிகளின் வேலைக்கே உலை வைக்கவும் முயற்சி செய்கிறது”, என மருத்துவர் ராஜ்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் அஞ்சியது போலவே அவரது பேட்டி நியூஸ் 18-ல் வெளியான அன்றே அவரை RDA-விலிருந்து நீக்கிய அறிவிப்பு வெளியானது.

The expulsion notice against Dr Rajkumar at AIIMS.

மோடி அரசையோ, AIIMS நிர்வாகத்தையோ விமர்சிக்கும் செய்திகளை மிரட்டி அழிக்க வைப்பது அல்லது திருத்துவது பலமுறை நடந்திருக்கிறது; எனினும் மருத்துவர் ராஜ்குமார் RDA-வில் இருந்து நீக்கப்பட்டதால் இவ்விஷயம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.