பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் தான் நாங்கள் இந்த (சிஎபி) சட்டத்தை இயற்றியுள்ளோம் என்று பிரதமர் மோதி கூறியுள்ள நிலையில், பாஜக அரசின் மத அடிப்படையிலான குடியுரிமை வழங்கும் மசோதா சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுளளது.
முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தும் விதத்திலான இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டமானது “அடிப்படையிலயே பாரபட்சமாக உள்ளது” என்று ஐநா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்ததுடன், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று, செய்தியாளர்களை சந்தித்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜெரமி லாரன்ஸ் கூறியதாவது, “முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தும் விதத்திலான இந்த புதிய குடியுரிமைச் சட்டமானது “அடிப்படையிலயே பாரபட்சமாக உள்ளது”. குறிப்பிட்ட ஆறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அதில் விலக்கு என்று அரசு அறிவித்துள்ளது இந்தியாவின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனும் கோட்பாட்டையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று கூறினார்.
மேலும் “அரசின் இந்த புதிய சட்டமானது உச்சநீதிமன்றத்தில் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். மனித உரிமைகள் தொடர்பாக ஐநாவுடனான இந்திய ஒப்பந்தங்களுக்கு முரணில்லாத வகையில் இறுதி தீர்ப்பு அமையும் என்று நாங்கள் ஆதரவு வைக்கிறோம்.” என்று கூறினார்.
நாடு முழுவதும் சிஎபி க்கு எதிராக போராட்டங்கள் எழுச்சி பெற்று வரும் வேலையில் ஐநாவும் இவ்வாறு கூறியுள்ளது மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.