இந்த விமானங்கள் தயாரிப்பு குறித்த ஒப்பந்தம் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விமான தயாரிப்பாளர் நிறுவனமான போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் செய்து கொண்டதாகும்; இந்த விமானங்கள் வி.வி.ஐ.பி-களின் பயணத்திற்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும்.
பட்ஜெட்டில் ஒதுக்கீடு:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் உரையில், சிறப்பு கூடுதல் பிரிவு விமான நடவடிக்கைகளுக்காக (எஸ்.இ.எஸ்.எஃப்) இரண்டு புதிய விமானங்களை வாங்க மொத்தம் ரூ .810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளின் (2018/19 மற்றும் 2019/20) போது ரூ .4,741.85 கோடிக்கு மேல் அரசு ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் இந்த நிதி ஆண்டிலும் இதற்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் உள்ளது :
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணைத் ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணித்து வந்த ஏர் இந்தியா (போயிங் 747) விமானம் கடந்த 25 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதற்கு மாற்றாக இரண்டு புதிய விமானங்கள் போயிங் 777-300ER வரும் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என செய்தி வெளியாகியுள்ளது.
விமானங்களின் சிறப்பம்சங்கள்:
இந்த விமானங்களில் ஏர் இந்தியா ஒன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஏர் இந்தியா ஒன் (AI-1 அல்லது AIC001 என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயணிக்கும் விமானங்களில் மட்டுமே சின்னமாக குறிக்கப்படும்.
இந்த சிறப்பு விமானங்களில் நான்கு முக்கிய கூறுகள் உள்ளன: என்ஜின்கள், கேபின் உள்ளமைவு, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் விமானத்திற்கு என்றே ஒரு தனி விலை. இந்த காரணங்களால் தான் விமானங்களின் விலை கூடுகிறது.
அதுமட்டுமின்றி இந்த புதிய விமானங்கள், பிரதமர் மோதிக்கு தேவையான தாராளமான அலுவலக இடம், சந்திப்பு அறைகள் மற்றும் பரந்த அளவிலான தகவல் தொடர்பு அமைப்புகளை வழங்கும் விதத்தில் கட்டமைக்கப்படுகின்றன.
மேலும் இவ்விமானங்களை நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் மட்டுமே கூடுதலாக பயன்படுத்த இயலும்.
அமெரிக்க அதிபருக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் :
தற்போது தயாராகிவரும் இந்த விமானம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன்னிற்கு (போயிங் 747-200 பி) இணையான பாதுகாப்பு வசதிகளை கொண்டதாக இருக்கும். இந்த ‘ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின்’ காரணமாகவே, விமானங்களை ஐ.ஏ.எஃப் (இந்திய விமானப்படை) இயக்கும், ஏனெனில் அத்தகைய அமைப்புகளை கொண்ட விமானங்களை இயக்கும் திறன் ஐ.ஏ.எஃப் இடம் மட்டுமே உள்ளது.
மொத்த ஒதுக்கீடு:
இந்த விமானங்களுக்காக இதுவரை ரூ 5,552.08 கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது, அதாவது வர கூடிய ஆண்டுகளில் ரூ 2,900 கோடிக்கு மேல் ஒதுக்க வேண்டியிருக்கும். இந்திய பொருளாதாரம் உள்ள நிலையில் இதுவெல்லாம் மிகவும் அவசியமா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.