தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உபி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது.
மொத்த வழக்குகளில் 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இதில் 70 விழுக்காட்டிற்கு அதிகமான சுமார் 30 வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாகவும், மீதமிருக்கும் 11 வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட 10 அமர்வுகள் இந்த வழக்குகளை விசாரித்திருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
என்.எஸ்.ஏ வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில், இச்சட்டம் பயன்படுத்துதல் குறித்த மறு ஆய்வு அவசியமா என்ற கேள்விக்கு உத்திரபிரதேச தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி பதிலளிக்க மறுத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போது போலீசார் பல வழக்குகளில் இருந்து காபி பேஸ்ட் செய்வதாகவும், மாவட்ட மாஜஸ்ட்ரேட்களும் இது குறித்து அறிவீனமாக செயல்படுவதாகவும் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.