“எல்லா முஸ்லிமும் தீவிரவாதியல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிமாக இருக்கிறார்கள்” – உடன் படித்த தோழர் ஒருவர் கூறிய இக்கூற்றினால் மனமொடிந்து போனார் ஹாஷ்மி.
முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லையா? :
முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லையெனில் அவர்கள் ஏன் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்ற தொடர்ச்சியான கேள்விகளால் உந்தப்பட்டு, இதிலுருக்கும் ஆழ அகலம் என்ன என அலச விரும்பினார் அவர். முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லையா? அல்லது அவர்களில் சில பைத்தியக்கார்ர்கள் செய்த காரியங்களை வெகுவாக கண்டிக்கவில்லையா? உலகளவில் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டினை துடைக்க எண்ணினார் ஹாஷ்மி. இதுபற்றிய தேடலில் கூகுளுக்குள் மூழ்கியவர் சுமார் 712 பக்கங்களுடைய தீவிரவாத செயல்களை கண்டித்து முஸ்லிம்கள் விட்ட கண்டன அறிக்கைகளடங்கிய தரவுகளை தேடியெடுத்தார். அவற்றை ட்விட்டர் வழியாக பதிவிட்டார். அதில் குடும்பத்தில் நிகழும் வன்முறை தொடங்கி அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு வரையிலும் விபரங்களை ஒருங்கிணைத்திருந்தார்.
அவர் பதிவிட்ட 24 மணிநேரத்தில் அவருடைய ட்வீட் சுமார் 15,000 பகிர்வுகளை கடந்திருந்தது. அவருடைய ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் நபர்களில் சிலர் இந்த தரவுகளை ஒரு இணையதளம் உருவாக்கி அதில் பகிரலாம் என யோசனை கொடுத்து அதற்கு உதவியும் செய்தனர். அந்த இணையதளத்திற்கு Muslimscondemn.com என பெயரிட்டனர். இது நடந்தது கடந்த நவம்பரில் ஆகும். இதற்கு பிறகு அந்த இணையதளம் பெரிய வளர்ச்சியை பெற்றது.
எங்கோ யாரோ செய்யும் பைத்திக்காரத்தனங்களுக்கு..
ஹாஷ்மி தொடங்கிய அந்த இணையதளம், வெறும் தீவிரவாதச்செயல்களை கண்டிக்கும் முஸ்லிம்கள் விடும் அறிக்கைகளுக்காக மாத்திரமல்லாமல் உலகில் எங்கு ஒரு தீவிரவாத சம்பவம் நடந்தாலும் அதற்கு முஸ்லிம்கள் ஏன் வலிய வந்து மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அதில் சம்மந்தப்பட்டது நாங்கள் இல்லை என நிரூபிக்க வேண்டும்? எங்கோ யாரோ செய்யும் பைத்திக்காரத்தனங்களுக்கு எங்கோ இருக்கும் முஸ்லிம் ஏன் பழியை சுமக்க வேண்டும் அல்லது மறுப்பு கூறவேண்டும்.. இவற்றை மையப்படுத்திய அவரது கட்டுரைகள் அமைந்தன.
கிறுஸ்தவர்களோ அல்லது கிறுஸ்தவ மதமோ இலக்காவதில்லை:
KKK , Waestboro Baptist church or Lord’s Resistance Army போன்ற தீவிரவாத போக்குடைய இயக்கங்கள் தங்களை கிறுஸ்துவத்தின் பாதுகாவலர்கள் என கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர்களுடைய செயல்களுக்கு ஒட்டுமொத்த கிறுஸ்தவர்களோ அல்லது கிறுஸ்தவ மதமோ இலக்காவதில்லை.
நாமும் அவ்வாறு சிந்திப்பதில்லை. மதம் வெறி முற்றிய சில மூடர்களின் செயலை அந்த மதம் மற்றும் அந்த மதத்தை உண்மையாக விளங்கிக்கொண்டு சமாதானமாக வாழ்வோரை நாம் குற்றப்படுத்த விரும்பவில்லை, ஆனால் இஸ்லாமும் முஸ்லிம்களும் மட்டும் ஏன் ஒவ்வொரு முறையும் பழிகளை சுமக்க வேண்டும் என இந்த உலகம் கட்டாயப்படுத்துகிறது.
உதாரணமாக கூற வேண்டுமானால், லண்டன் குண்டுவெடிப்பினை எடுத்துக்கொள்ளுங்கள். அதை செய்தவன் காலித் மசூத் என அறியப்படுகிறான். ஆனால் அவனது நிஜப்பெயர் ஆட்ரியன் எல்ம்ஸ் என்பதும் அவன் கென்ட்டின் டார்ட்ஃபோர்டு் பகுதியை சேர்ந்தவன் என்பதும், சிறையில் இருந்தபோது அவன் இஸ்லாத்தை தழுவிக்கொண்டதாக தெரிந்த விபரங்களை எதையும் ஊடகம் வெளியிடவில்லை. அது பற்றி யாரும் அறியவுமில்லை.
அவன் முஸ்லிமானது ஒருபுறமிருந்தாலும் அவனது பிறப்பு, வளர்ப்பு பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.எனவே ஒரு சமூகத்தை குற்றம்பரம்பரையாக சித்தரிக்கும் முன் நம்மோடு வாழ்ந்தவர்களது விபரங்களை முதலில் அறிந்து வைத்துக்கொள்ள முயல வேண்டும் என முடிக்கிறார் ஹாஷ்மி.
இனி யாராவது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தரக்குறைவாக பேசினால் ஹாஷ்மி தொடங்கிய இணையதளத்தை அடையாளப்படுத்தி அங்கு போய் படிக்கச்சொல்லலாம்.