கடந்த மூன்று மாதங்கள் வரையிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த நிலையில் மதக்கலவரங்களுக்கும் குறைவில்லாமல் பதற்றமாக போய்க்கொண்டிருந்த வடக்கு டெல்லியின் சூழல் இப்போது சற்றே தணிந்து வருகிறது.
34 வயதான இப்ரானா சைஃபி என்கிற பெண், தன்னோடு மேலும் 3 புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களை வைத்துக்கொண்டு, வடக்கு டெல்லியின் அனைத்து கோவில்கள், மஸ்ஜிதுகள், குருத்வாராக்கள் மற்றும் சர்ச்சுகளில் நுழைந்து கொரோனா பரவாமல் தடுக்கும் கிருமிநாசனி தெளித்து வருகிறார்.
கொரனா வாரியர்ஸ் என தனது குழுவிற்கு பெயர் வைத்துக்கொண்ட இம்ரானாவுக்கு 3 குழந்தைகள் உண்டு. அவருடைய கணவர் நியமத் அலி ஒரு தினக்கூலி ஆவார். 7ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி பயின்றுள்ள இம்ரானா, தான் வசிக்கும் பகுதியின் குடியிருப்போர் நலன் சார்ந்த சங்கத்தினுடைய உதவியில் கிருமி நாசினி திரவ சிலிண்டர்களை பெற்று இந்த அன்றாட தொண்டினை மேற்கொண்டு வருகிறார்.
ரம்ஸான் மாத நோன்பினையும் கடைபிடித்தபடி அவர் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் ஏறி கிருமிநாசினி தெளித்து்வருவது அங்குள்ள மக்களிடையே மத நல்லிணக்கத்தை மேம்படுத்தி வருவதாக நவதுர்காதேவி கோவிலின் அர்ச்சகர் பண்டிட் யோகேஷ் கிருஷ்ணா கூறுகிறார்.
மத விரோதம் பாராட்டி சற்று நாட்களுக்கு முன்பு வரையிலும் கலவரக்காடாய் காட்சியளித்த வடக்கு டெல்லியும் அதன் சுற்றுப்புறமும் அடுத்ததாக நிஸாமுதீனில் கூடிய தப்லீகிகளால் தான் கொரனா பரவி விடப்பட்டது என்ற பழிகளுக்கு ஆளானது. தற்போது அதை அனைத்தையும் மறந்து சுகாதாரப்பணியில் எங்களுக்கு மசூதிகளும் கோவில்களும் ஒன்று தான் நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை என்கிறார் இம்ரானா.
நாங்கள் புர்கா அணிந்துகொண்டு பணிக்கு வருவதை யாரும் தடுப்பதில்லை மாறாக கோவிலுக்குள் எங்களை அழைத்துச்சென்று மருந்து தெளிக்க அனுமதிக்கின்றனர் என்கிறார் அவர்.