பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தில், 18 முஸ்லிம்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் இந்தி பேட்டியை சிறிய மாறுதல்களுடன் கீழே வழங்குகிறோம்.
பசுவின் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு குளித்து,ஷேவிங் செய்து, இவர்கள் இந்து சனாதனவாதிகளாக மாறி உள்ளனர். டைனிக் பாஸ்கர் இந்த கிராமத்தை அடைந்து மதமாற்றம் பற்றி விசாரித்தபோது, இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வறுமை மற்றும் பசி என்று தெரிந்தது. மதம் மாறியவர்கள் ரேஷன் கார்டு செய்து தருமாறும், வீடு கட்டித் தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர், எனினும் முஸ்லிம்களாக இருந்ததால் அவர்களுக்கு எந்த ஒரு அரசாங்க உதவியும் கிடைக்கப்பெறாமல் இருந்துள்ளது.
இதில் விசேஷம் என்னவெனில், இந்து மதத்திற்கு மாறியவர்கள், முன்னர் முஸ்லீம்களாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாத்தின் பண்டிகைகள் கூட தெரியாமல் உள்ளது. அவர்கள் வழமையாக தொழுவதில்லை, குர்ஆனை படித்ததில்லை. மசூதிக்கு கூட செல்வதில்லை. இந்த நிலையில் இந்து மதத்திற்கு மாறினால் வீடு, வசதி எல்லாம் கிடைக்கும் என்று கூறியதாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அம்பா பஞ்சாயத்து ரத்லம் நெடுஞ்சாலையில் இருந்து 30 கி.மீ. இல் இவர்களின் வசிப்பிடம் உள்ளது. சிலரிடம் வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கிராமத்தில் இம்மக்கள் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் கிராமம் கிராமமாக பிச்சை எடுத்து தான் குடும்பத்தை ஓட்டி வருகிறார்கள்.
மதம் மாறியவர்களில் முக்கியமானவர் ராம் சிங், ஒரு பிரதிநிதியாக செயல்படுகிறார். இதற்கு முன்பு இவரது பெயர் முஹம்மத். பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார். “சில நாட்களுக்கு முன் சிவ புராண கதை கேட்க கிராமத்திற்கு சென்றிருந்ததோம், கேட்ட பின்பு இனி சனாதனியாக (இந்துவாக) நாம் மாறிட வேண்டும் என்று நினைத்தோம். சுவாமிஜியிடம் எண்ணத்தைச் சொல்லிவிட்டு சனாதனியாக மாறினோம் . மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நாங்கள் இந்துக்கள். பிறகு முஸ்லீம் ஆனோம். இப்போது நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளோம். எங்களுடைய தோழர்கள் பலரும் சனாதன தர்மத்தில் (இந்து மதத்தில் ) இணைவார்கள்.” என்றார் ராம் சிங்.
இந்து மதத்திற்கு மாறிய மற்றொருவரான அர்ஜுன் நாங்கள் மனமுவந்து இந்து மதத்தை ஏற்றுக்கொண்டோம் என்று கூறினார். முன்பு எப்படி பிரார்த்தனை செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் – “நாங்கள் ஒருபோதும் நமாஸ் செய்ததில்லை. தந்தை, தாத்தா கூட பள்ளிவாசலுக்கு சென்றதில்லை. நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்து மதத்தை நம்புகிறோம்.” இருப்பினும், அர்ஜுன் இதைச் சொல்லும்போது, ராம் சிங் அவருக்கு அருகில் நின்று, முன்பு ஈத் (பெருநாள்) அன்று நமாஸ் செய்து வந்தோமே என கூறுவது கேட்டது.
ருக்மணியிடம் ருக்சனா என்ற பெயரை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டதற்கு. ” நாங்கள் இந்துக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் முன்னோர்களும் இந்துக்கள்தான்… வயிற்று பிழைப்பிற்காக முஸ்லிம்கள் ஆனோம்” என்றார்.. இந்த பதிலில் அவரை அறியாமலேயே உண்மையை உளறி விட்டார்.. பிறகு இதை சுட்டி காட்ட .. ஆம் முன்பு நான் நமாஸ் செய்வேன் (தொழுவேன்) என்று அவர் ஒப்புக்கொண்டார்.. இப்போது யாரை வழிபடுகிறீர்கள் என கேட்டதற்கு, ‘மாதா ஜி’ யை என்றார்.
அடுத்தது சந்தானி, இவர் இன்னும் மதம் மாறவில்லை, ஆனால் நெற்றியில் திருநீர் இருந்தது. நீங்களும் இந்து மதத்தில் சேரப் போகிறீர்களா என்று கேட்டோம், ஆம் என்றார். “நாங்கள் ரமழானில் நோன்பு நோற்றதில்லை. நமாஸ் படிக்கவில்லை. மசூதிக்குப் போகவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்து மதத்தைப் பின்பற்றுகிறோம். நாங்கள் இந்துக்களாக இருந்தோம், இப்போதும் இந்துக்களாகவே இருக்க விரும்புகிறோம். நாங்கள் பிச்சை கேட்டு வாழ்கிறோம், அதனால்தான் உலகம் எங்களை முஸ்லிம்கள் என்று அழைக்கிறது.” என்றார் சந்தானி.
அடுத்து அருகில் நின்ற சந்தானியின் கணவர் சாகரை சந்தித்தோம். “மஹாகாளி” என்று எழுதப்பட்ட துப்பட்டாவை நெற்றியில் அணிந்த அவர், முன்பு ஈத் தினத்தில் தொழுது வந்ததாக சற்று கவனமாக கூறினார். உங்கள் மனைவி தொழுவதில்லை என்கிறாரே என்றோம், அதற்க்கு ஆம் அவள் எங்கே தொழுகிறார்? நான் தான் தொழுது வந்தேன்” என்றார்.
என் பெயர் முன்பு ரஞ்சிதா பி என்று ரஞ்சிதா பாய் கூறுகிறார். “மூன்று தலைமுறைக்கு முன்பு நாங்கள் இந்துக்கள். பிறகு முஸ்லீம் ஆனோம். தொழுது வந்தோம். கலிமா சொல்லி வந்தோம். சிறிது நாட்களுக்கு முன் (சிவ புராண) கதை கேட்கப் போனோம். அப்போது எங்கள் (இந்து) மதம் நினைவுக்கு வந்தது. இப்போது இந்து மதத்தில் இணைந்திருப்பதால் போலேநாத்தை (இந்து தெய்வம்) வணங்குகிறோம்.” என்றார்
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே ரஞ்சிதாவிடம் பேசினோம். இந்த முறை அவர் மதம் மாறுவதற்கான உண்மையான காரணத்தை சொல்லி விட்டார். “இந்து மதத்திற்கு மாறினால் அனைவருக்கும் வீடு, நிலம்.. எல்லாமே கிடைக்கும். 18 பேருக்கு கிடைக்கும், என்று கூறினார்கள் ” என்றார்.
7ம் வகுப்பு படிக்கும் நவாப் இப்போது ரமேஷ் ஆகிவிட்டார். . “இந்துவாக மாறுவதற்காக பெயரை மாற்றி கொண்டேன் என்கிறான் அந்த சிறுவன். தொழுது இருக்கியா? என்று கேட்டதற்கு, ஆம், ஒருமுறை தொழுதுள்ளேன் என கூறினான் . அது என்ன ஹிந்து-முஸ்லிம் என்பதெல்லாம் என கேட்டதற்கு, நாங்கள் முன்னதாக இந்துக்களாக தான் இருந்தோம், இப்போதும் நாங்கள் இந்துவாக மட்டுமே இருக்க விரும்புகிறோம்.”
எந்தெந்த பண்டிகைகளை முன்பு கொண்டாடினீர்கள்? என்ற கேள்விக்கு தீபாவளி மற்றும் நவராத்திரியை அனைவரும் கொண்டாடுவது வழக்கம். இனி எந்தப் பண்டிகையைக் கொண்டாடுவீர்கள் என்று கேட்டோம். மாதாஜியின் விழாவை கொண்டாடுவோம் ” என்றான் சிறுவன்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் கான்ஷாவின் புதிய பெயர் சவான். “முன்பு ஈத் கொண்டாடி வந்தோம். இனி ஹோலி மற்றும் தீபாவளியையும் கொண்டாடுவோம்” என்றான் சவான். 9வது வகுப்பு படிக்கும் நாசர் அலி இப்போது முகேஷ் ஆகிவிட்டார். முன்பு முஸ்லிமாக இருந்ததாகவும் தற்போது இந்துவாக மாறிவிட்டதாகவும் கூறினார் முகேஷ்.
சிவ புராண கதையைக் கேட்டதும் மதம் மாற விருப்பம் தெரிவித்தார்கள் என ஆசிரமத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.
“இங்கு சிவபுராண கதையின் அமைப்பாளர் நரேந்திர ரத்தோர், ஆனந்தகிரி மகாராஜ் கதையை இங்கு சொல்லிக் கொண்டிருந்தார். இவர்கள் கதை கேட்க இங்கு வந்திருந்தனர். பிறகு அவர்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்தனர். ஆசிரமத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்திர ஷர்மா, கூறுகையில் இவர்கள் தங்களை முஸ்லிம்களாகவோ, இந்துக்களாகவோ கருதி கொள்ளவில்லை என்கிறார். சிவபுராணக் கதையின் போது, அவர்கள் சனாதனியாக (இந்து மதத்திற்கு) மாறினால், ஒரே ஜாதியாக பார்க்கப்படுவோம் என்று அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் பதியா சாதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு கள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதம் என்ற `மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா 2020′ அம்மாநிலத்தில் அமலில் உள்ளது. எனினும் அது எதற்கு கொண்டுவரப்பட்டது, யாருக்கு எதிராக செயல்படும் என்பது பொது அறிவு உள்ள அனைவரும் அறிந்ததே!