Corona Virus Fact Check Islamophobia Muslims

முஸ்லிம் பழவியாபாரி கொரோனா பரப்ப எச்சில் தடுவுகிறாரா? உண்மை என்ன?

இந்த காணொளி பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மட்டுமின்றி டிக் டாக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் வழியாகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் வயதான முஸ்லிம் முதியவர் ஒருவர் எச்சில் துப்பி அதை பழங்களின் மீது தேய்ப்பது போன்ற செய்கையை செய்வதை காணமுடிகிறது.

முப்பது வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் தனது பழ வண்டியின் ஒரு பகுதியில் உள்ள சில பழங்களை மற்ற பகுதிக்கு மாற்றுகிறார் முதியவர். இடையிடையே கை விரல்களில் எச்சிலை கொண்டு பழங்கள் மீது தடவுகிறார்.இதனால் இவர் கொரோனா பரப்புகிறார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதை முதலில் ட்விட்டர் பயனர் ‘தேசி மோஜிடோ’ “இது வேற லெவல். பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள்” என்ற செய்தியுடன் வெளியிட்டார். இந்த ட்வீட்டில் சுமார் 5800 லைக்குகள் உள்ளன, மேலும் 4500 க்கும் மேற்பட்ட முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. தொன்னூறு ஆயிரத்துக்கும் நெருக்கமானவர்கள் இதை பார்வையிட்டுள்ளனர்.

பாஜக உறுப்பினர் மேஜர் சுரேந்திர பூனியா, ஸ்வராஜ்ய கட்டுரையாளர் ஷெபாலி வைத்யா, பாஜக ஆதரவாளர்களான சோனம் மகாஜன், சங்கராந்த் சானு, மற்றும் போலி இமாம் முகமது தவ்ஹீதி (@Imamofpeace) ஆகியோர் இதேபோன்ற விவரிப்புடன் வீடியோவை ட்வீட் செய்த முக்கிய சமூக ஊடக கணக்குகளில் அடங்குவர். அவர்களின் ட்வீட்டுகள் இதுவரை பல லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் வியாபாரிகளிடம் எதையும் வாங்க வேண்டாம் என்ற வாசகத்துடன் பல இந்துத்துவா ஆதரவாளர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.

இந்தி செய்தி சேனலான டி.வி 9 பரத்வர்ஷும் அந்த வீடியோவை ஒளிபரப்பி பழ விற்பனையாளரை “கொரோனா கிரிமினல்” என்று அழைத்து தன் பங்குக்கு வெறுப்பு பிரச்சாரத்தில் பங்களிப்பை வழங்கியது. எனினும் இது எப்போது படமாக்கபட்டது என்பது குறித்தோ அல்லது இது குறித்த முழுமையான தகவலையோ தரவில்லை.

உண்மை என்ன?

இந்த வீடியோ மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் நகரை சேர்ந்தது என்றும் இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் இணையத்தில் தேடுகையில் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. வீடியோவில் பழம் விற்பவர் ரைசன் நகரில் வசிக்கும் ஷேரூ கான் ஆவார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் 269 மற்றும் 270 பிரிவுகளின் கீழ் பழ விற்பனையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து பழ வியாபாரியின் மகள் ஃபிசா : “இவர் எனது தந்தை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டவராக உள்ளார். எனது தந்தை பணத்தை எண்ணி கொண்டே இருப்பது போல செய்கையை செய்து கொண்டு இருப்பார். இந்த வீடியோ ஆறு வாரங்களுக்கு முந்தையது, பழைய வீடியோவாகும், இதை சிலர் (கொரோனா பரப்புவதாக) தற்ப்போது நடைபெற்றது போல பரப்பி வருகின்றனர். அவருக்கு என்று சொந்தமான தள்ளுவண்டியும் இல்லை. பழங்களை விற்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் எனது தந்தை மற்றவர்களிடமிருந்து வண்டியை கடன் வாங்குவர்” என்று கூறுகிறார்.

மேலும் முதியவர் என்றும் பாராமல் போலீசார் தனது தந்தையை தாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடியோ பழையது தான் என்று ரைசன் நகர எஸ்.பி. உறுதி படுத்தியுள்ளார். மேலும் இந்த பிரச்சினை விசாரிக்கப்பட்டு வருவதாகவும், “பயப்பட ஒன்றுமில்லை” என்றும் சிலர் மத ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கில் செய்திகளை பரப்புகின்றனர் இதை குறித்தும் மக்கள் தூரம் விலகி இருக்க வேண்டும் எனவும் ரைசன் குடியிருப்பாளர்களுக்கு கூறுகிறார். நகரத்தில் இதுவரை ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் சுக்லா தெரிவித்தார்.

எப்போது எடுக்கப்பட்ட வீடியோ?:

எஃப்.ஐ.ஆர் படி, இந்த சம்பவம் பிப்ரவரி 16, 2020 அன்று நடந்துள்ளதை அறிய முடிகிறது. புகார்தாரர் போத்ராஜ் திப்பட்டா தனது நண்பர் பவிஷ்ய குமாரின் பான் கடையில் உட்கார்ந்திருந்தபோது இந்த வீடியோவை படமாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நோய் பரப்பவே இவ்வாறு செய்துள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்..

FIR

எனவே இந்த ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது இந்த வீடியோ. இந்தியாவில் முதல் கொரோனா வழக்கு 2020 ஜனவரி 30 அன்று பதிவானது என்பதையும் மார்ச் 14 அன்று தான் பேரழிவாக அறிவித்தது (notified disaster) மோடி அரசாங்கம்.

மத்திய பிரதேசத்தில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு மார்ச் 20 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.

பழ வியாபாரியின் மகள் கூறுவது பொய்யாக இருக்கலாம் தானே?

மேலுள்ள காணொளி மற்றும் வீடியோவை கண்ட பிறகு, சிலருக்கு ஃபிசா தன் தந்தையை காப்பாற்ற ஏன் பொய் சொல்லி இருக்க மாட்டார் என்ற கேள்வி எழலாம். இது நியாயமானதும் கூட. எனினும் இங்கு பிரதானமான கேள்வியே அந்த முதியவர் கொரோனாவை பரப்பினாரா இல்லையா என்பது தான். அதற்கு முதலில் விடை காண்போம். ஷேரூ கான் என்ற அந்த முதியவருக்கு எந்த விதமான காய்ச்சலோ சளி, இருமலோ அல்லது கொரோனா நோய் தொற்றின் எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இவ்வாறு உள்ளதாக பாசிஸ்டுகள் கூட பரப்பவில்லை.

அடுத்ததாக அவர்களின் வாதபடியும் கூட முதியவர் கொரோனா பரப்ப வேண்டுமேயானால் முதலில் அவருக்கு கொரோனா உள்ளதை அவர் அறிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதியவர் அன்றைய தினம் வரை கொரோனா நோய் தொற்றுக்கு சோதனை செய்யப்படவே இல்லை. இன்று வரையிலும் கூட அவருக்கு கொரோனா நோய் உள்ளது என்று அரசாங்கம் கூறவில்லை.

அதுமட்டுமின்றி அவர் எப்போதும் போல தனது வீட்டிலேயே தான் வாழ்ந்து வருகிறார், மேலே பகிரப்பட்ட வீடியோவிலும் கூட தந்தையுடன் ஒட்டி கொண்டு தான் அமர்ந்து இருக்கிறார் அவரது மகள். இதை கொஞ்சம் யோசித்தாலேயே விளங்கும் அவர் ஏழை வியாபாரி தான் அவர் கொரோனா பரப்புவதற்காக இதை செய்யவில்லை என்று. அவரது மகளின் பேச்சை பொறுத்தவரை நம்புவது உங்கள் விருப்பம், எனினும் முதியவருக்கு நோய் பரப்பும் எண்ணம் இல்லை என்பது உறுதியாகவே செய்கிறது.

முஸ்லிம் வியாபாரி செய்தது சரியா?

பழவியாபாரியின் செயல் சுகாதாரமற்றது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை, இருப்பினும் இந்த பிரச்சினையை சமூக ஊடகங்களில் மதச்சாயம் பூசப்பட்டு திரிக்கப்படுகிறது, பல நபர்கள் இந்த காணொளியை பயன்படுத்தி முஸ்லிம் விற்பனையாளர்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இது முற்றிலும் தவறானதாகும். மேலும் சிலர் இதிலும் திருப்தி அடையாமல் இவர் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு சென்று வந்தவர் போல பொய்களையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவி வரும் நிலையில், அதற்கான மருந்தை கண்டுபிடிக்க உலகமே ஈடுபட்டு கொண்டிருக்க இந்தியாவிலோ நோய் தொற்றுக்கும் கூட மதச்சாயம் பூசி கொண்டு இருந்தால் நாம் திசை மாறி செல்வோம். கொரோனாவை கட்டுப்படுத்த நாம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் பயனற்று போகும் என்பதில் ஐயமில்லை.