ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ள நிலையில் அமெரிக்க படைகளை வெளியேற்ற “மில்லியன் மக்கள் பேரணி ” நடத்துவதற்கு ஈராக்கின் ஜனரஞ்சக ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் அழைப்பு விடுத்துள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு படைகளின் ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என அவர் கூறி உள்ளார். எனினும் இதற்கான இடம், தேதி பற்றிய விவரங்களை அவர் அறிவிக்கவில்லை.
“ஈராக்கிய மண்ணில் அமெரிக்க தொடர்ந்து இருந்து வருவதற்கும், அதன் விதி மீறல்களையும் கண்டிக்கும் முகமாகவே இந்த மில்லியன் மக்கள் பேரணி. அமைதியான, ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்துங்கள்” என அவர் ஈராக்கியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈராக்கில் அமெரிக்க படைகள் :
ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் எஞ்சியுள்ளனர் – அவர்களில் பெரும்பாலோர் ஹஷ்த் அல்-ஷாபி எனும் ஈரான் ஆதரவுடைய துணை ராணுவ படைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான 2014 முதல் 2017 போரின் போது உதவ வந்த வீரர்கள் ஆவர்.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்தல், அமெரிக்க தூதரகத்தை மூடுவது, அமெரிக்க படைகளை “அவமானகரமான முறையில் வெளியேற்றுவது” உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து சதர் இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.