உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதமே இது குறித்து, பிரதமர் மோடியே நேரடியாக, தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது நிலைமை மோசமாகி வருகிறது.
மார்ச் 9,10ம் தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
“COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முகமாக பொதுவில் பெருங்கூட்டமாக ஒன்று கூடுவதை குறைத்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அமித் ஷாவும் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியர்களான எங்களுக்கு ஹோலி ஒரு மிக முக்கியமான பண்டிகை. ஆனால் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் கொண்டாட்டத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
பொதுவில் கூட்டமாக ஒன்று கூடும் நிகழ்வுகளை தவிர்த்திடுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
என உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை கேரளாவை சேர்ந்த மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு குணமடைந்தவர்களையும் அடக்கும்.. சாவ்லாவில் உள்ள ஐடிபிபி குவாரன்டைன் பிரிவில் வைக்கப்பட்டுள்ள 21 இத்தாலிய நாட்டினரில் 14 பேர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.