மத்திய அரசின் CAA, NRC, NPR ஆகிய குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் இந்தியா முழுதும் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்.
பல மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டமன்றங்களை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக, காங்கிரஸ், மஜக, IUML உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்களும் விரும்புகிறார்கள்.
எனவே தமிழக அரசிடம் இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, கூட்டமைப்பு சார்பில் கூடிய கூட்டத்தில், ஜமாத்துல் உலமா தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் பிப்ரவரி-19 அன்று தமிழக சட்டமன்றத்தை அமைதி வழியில் முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்ட நிகழ்வுகளில் அனைத்து சமூக மக்களும் அலை, அலையாய் பங்கேற்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
இது ஜனநாயகம், சமூகநீதி, அரசியல் சாசன மரபுகள் ஆகியவற்றை காப்பதற்கான அறவழி போராட்டம் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல் .ஏ வுமான மு.தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.