இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரின் சிலைகள் பள்ளிவாசலின் கீழ் புதையுண்டுள்ளதா என்பதை கண்டறிய ஆக்ராவில் உள்ள ஜஹானாரா மசூதி (ஜமா மஸ்ஜித் ஆக்ரா என்று பிரபலமாக அறியப்படுகிறது) உள்ள நிலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) கதிரியக்க பரிசோதனை செய்யக் கோரி மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலைகளை பள்ளிவாசலுக்கு கீழ் அவுரங்கசீப் புதைத்தாராம்:
முகலாய பேரரசர் அவுரங்கசீப், மதுரா ஜன்மஸ்தன் கோயிலை இடித்துத் தள்ளிய (?) பின்னர், கிருஷ்ணரின் சிலைகளை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு எடுத்து சென்று அங்குள்ள ஜஹானாரா மசூதியின் கீழ் புதைத்தார் என கூறி, இதன் அடிப்படையில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மதுராவில் ஷஹி ஈத்கா அமைந்துள்ள இடத்தை கிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளைக்கு வழங்கக் கோரி இந்து தெய்வம் ஸ்ரீகிருஷ்ணா விராஜ்மான் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில் இந்த விண்ணப்பம் நகர்த்தப்பட்டுள்ளது.
அவுரங்கசீப் ஆக்கிரமித்தாராம், எனவே ஆய்வு நடத்த வேண்டுமாம்:
இந்த மொத்த வழக்கே ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தை அவுரங்கசீப் ஆக்கிரமித்ததார் என்பதை அடிப்படையாக கொண்டதே. எனினும் இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையிலும், “ஜஹனாரா பள்ளிவாசலின் கீழ் சிலைகள் உள்ளதா என ஆய்வு செய்வது அவசியம். அப்போது தான் சரியான தீர்ப்பு கிடைக்கும்” என விண்ணப்பதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போது விசாரணை?:
மதுரா சிவில் நீதிமன்றம் (மூத்த பிரிவு) கடந்த பிப்ரவரி 19 அன்று இவ்வழக்கில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்று (ஏப்ரல் 14) தாக்கல் செய்யப்பட்ட ஏ.எஸ்.ஐ ஆய்வைக் கோரும் விண்ணப்பம் மே 10 ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாஹி ஈத்காவை நிர்வகிக்கும் உ.பி. சன்னி மத்திய வக்ஃப் வாரியம், இந்த வழக்கில் முதல் பிரதிவாதி.
வழக்கு தள்ளுபடி:
கடந்த ஆண்டு, மதுரா சிவில் நீதிமன்றம் தெய்வத்தின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற வழக்கை ஷெபைட் மூலம் தாக்கல் செய்யவில்லை மாறாக ஒரு பக்தர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. “ஒவ்வொரு பக்தருக்கும் இதுபோன்ற வழக்குகளை தொடர அனுமதித்தால், அது நீதித்துறை மற்றும் சமூக அமைப்பை பாதிக்கும்”, என கடந்த ஆண்டு செப்டம்பர் உத்தரவில் நீதிமன்றம் கூறி இருந்தது.
அந்த வழக்கை தள்ளுபடி செய்ததற்கு எதிராக, மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது,