Corona Virus

“வைரஸின் குரல் பாசிசத்தின் குரல் போலவே இருக்கிறது” – மனுஷ்ய புத்திரன்

பாசிசத்தையும் வைரசையும் ஒப்பிட்டு அழகான கவிதை ஒன்றை எழுதியுள்ளார் மனுஷ்ய புத்திரன்..

வைரஸின் குரல்
பாசிசத்தின் குரல் போலவே இருக்கிறது

கூட்டம் கூடாதே என்கிறது
கூடியவர்கள் கலைந்து போங்கள் என்கிறது.
வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்கிறது
மரண தண்டனைக் கைதிகள் போல
முகங்களை மூடிக்கொள்ளுங்கள் என்கிறது
முழுமையாக சோதியுங்கள் என்கிறது

வைரஸின் குரல்
சனாதனத்தின் குரல் போலவே இருக்கிறது

இன்னொரு மனிதனை தொடாதே என்கிறது
அன்னியர்களின் அருகில் இருக்காதே என்கிறது
கைகளை எப்போதும் சுத்தப்படுத்திக்கொண்டே இரு என்கிறது
மாமிசங்களை புசிக்காதே என்கிறது

வைரஸின் குரல்
ஒழுக்கத்தின் குரல் போலவே இருக்கிறது

யாரையும் முத்தமிடாதே என்கிறது
யாருடனும் உடலைப் பகிராதே என்கிறது
ஒரு நாளைக்கு மூன்று முறை குளியுங்கள் என்கிறது
சுத்தமற்ற இடங்களில் இருக்காதீர்கள் என்கிறது

கொரோனா வைரஸ்
எப்போதோ இந்த பூமிக்கு வந்து விட்டது
இப்போதுதான் அது
இந்தப்பெயரில் அழைக்கப்படுகிறது

-மனுஷ்ய புத்திரன்