நாளை குடியரசு தினத்தன்று கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணி கட்சிகளின் சார்பில் மனுஷ்ய மஹா ஸ்ரீங்கலா என்ற பெயரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை மாபெரும் மனித சங்கிலியை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
620 கி.மீ மனித சங்கிலி :
கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களின் வழியாக 620 கி.மீ மனித சங்கிலி அமைக்கப்பட்டும். வடக்கே காசர்கோடு தொடங்கி தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம் வரை இது நீளும். பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளவர்களுடன் இணைந்து மனித சங்கிலியை அமைப்பார்கள், அதே சமயம் மலைப்பாங்கான மாவட்டங்களான இடுக்கி மற்றும் வயநாடில் அந்தந்த அதிகார எல்லைக்குள் மனித சங்கிலி அமைக்கப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டில் நடக்கவிருக்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது இருக்கும் என்று ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.
7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் :
ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த மெகா மனித சங்கிலி போராட்டத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று எல்.டி.எஃப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
முதல்வரும் பங்கேற்பார்:
“காசர்கோடு முதல் களியகாவிலை வரை தேசிய நெடுஞ்சாலையின் வலது பக்கத்தில் மக்கள் வரிசையில் நிற்பார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள மனித சங்கிலியில் இணைவார்கள்” என்று விஜயராகவன் கூறினார்.
எதிர் கட்சியினருக்கும் அழைப்பு:
எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் போராட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விஜயராகவன் கூறினார். இதற்கான அழைப்பை முதலமைச்சரே பகிரங்கமாக அறிவித்துள்ளார். கட்சி தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்க்கலாம் என்றாலும், சில எதிர் கட்சி ஆதரவாளர்கள் எங்களுடன் சேருவார்கள் என்று கருதுகிறோம். வகுப்புவாத மற்றும் தீவிரவாத சக்திகளைத் தவிர மற்ற அனைவரையும் நாங்கள் ஒன்று சேர்க்க விரும்புகிறோம், என்றார் விஜயராகவன்.