சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை எதிர்க்கும் விதமாக ட்விட்டரில் இந்திய அளவில் #beef4life போன்ற ஹாஷ்டாக்கள் ட்ரெண்ட் ஆனது.
நிர்மலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவரும் மற்றும் அவரது நண்பரும் மாட்டுக்கறி உண்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவேற்றினார். இதை தொடர்ந்து நிர்மல் வகுப்புவாத உணர்ச்சிகளை தூண்டியதாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ரத்தினபுரியில் வசிக்கும் குமார் மீது , ஐபிசி 505 (2) (இரு பிரிவினர்களுக்கிடையே தீய எண்ணத்துடன் பிரிவினை மற்றும் பகைமை உண்டாக்குதல்) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜூலை 23 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆணவ கொலைகளுக்கு எதிராக தெற்கு தாலுகா அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கோரி நிர்மல் குமார் கோவை நகர போலீஸை அணுகியதாக (திவிக) நிறுவனர் குளத்தூர் மணி மணி தெரிவித்தார்.
நிர்மல் குமார் இந்து மக்கள் கட்சிக்கு எதிரான பதிவுகளை பேஸ்புக்கில் பதிவேற்றுவதாகக் கூறி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனினும் போலீசார் அனுமதி மீறி ஜூலை 23 ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது, என்றாலும் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை ”என்று திரு மணி கூறினார்.
மேலும் காவல் துறையினர் நிர்மல் குமாரின் பேஸ்புக் பதிவுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர் என்பதால் அவரை அப்போதே கைது செய்திருக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜாமீன் பெற முடியாது என்பதால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சனிக்கிழமை கைது செய்துள்ளனர், ”என்று திரு.குளத்தூர் மணி மேலும் கூறினார்.
மாட்டுக்கறி உணவை சாப்பிடலாம் என பதிவிட்டாலே கைது செய்யும் நடவடிக்கைகள் வட இந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தன. தற்போது தமிழகத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.