மாட்டிறைச்சி விற்க பாஜகவின் மாவட்ட பிரிவு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்துகிறது!
பாரதீய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்ட பிரிவு இறைச்சி மற்றும் மீன்களை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான ஒரு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமிருந்து முறையாக ஒப்புதலும் பெற்றுள்ளது மாவட்ட பாஜக தலைமை.
கால்நடைகள் மற்றும் மீன் பொருட்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதாக எங்கள் பைலாவில் குறிப்பிட்டுள்ளோம். “நாங்கள் இன்னும் இறைச்சியை பதப்படுத்தவோ விற்பனை செய்யவோ தொடங்கவில்லை. எனினும் வருங்காலத்தில் இறைச்சி பதப்படுத்தும் சந்தையில் இறங்குவோமா இல்லையா என்று என்னால் இப்போது கூற முடியாது.” என்று பாஜக திரிசூர் மாவட்டத் தலைவர் ஏ.நாகேஷ் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
கூட்டுறவு சங்கத்தின் பெயரில் “இறைச்சி” என்ற வார்த்தை ஏன் சேர்த்துள்ளீர்கள் என்று நாகேஷிடம் கேட்கப்பட்டதற்கு , “நாங்கள் இறைச்சி என்ற வார்த்தையை சேர்க்கவில்லை என்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இப்பகுதியில் மற்றொரு இறைச்சி பதப்படுத்தும் கூட்டுறவு சங்கத்தை திறக்க கூடும். எனவே இது ஒரு வகையான தடுப்பு நடவடிக்கையாகும். ” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் “நாங்கள் பெயரில் எந்த மாற்றதையும் செய்ய மாட்டோம். பாஜக இறைச்சி விற்பனை செய்வதற்கோ உண்பதற்கோ எதிரானது அல்ல. எனினும் நாங்கள் மாடுகள் கொல்லப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் ” என்று அவர் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விளக்கத்தை தெரிவித்தார்.
இது கடைந்தெடுத்த நயவஞ்சகத்தனம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.