முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன.
மலாலியில் உள்ள அஸ்ஸயீத் அப்துல்லாஹில் மதனி ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் புதுப்பிக்கும் போது கோயில் போன்ற அமைப்பு உள்ளது என இந்துத்துவாவினர் சர்ச்சையை கிளப்பினர்.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்எல்ஏ பரத் ஷெட்டி மற்றும் விஎச்பி தலைவரும் ஷரன் பம்ப்வெல்லும் முன்னின்று பிரச்சனையை பெரிது படுத்தி வருகின்றனர்.
வலதுசாரி இந்துத்துவா அமைப்பான விஎச்பி, கடந்த மாதம் மசூதியை புதுப்பிக்கும் போது கோயில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இது இந்து வடிவிலானதா அல்லது ஜெயின் வடிவிலானதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது இரண்டும் இல்லை பழைய காலங்களில் மிகவும் சகஜமாக காணப்பட்ட ஒரு கட்டிட கலை வடிவமே இது என பள்ளிவாசல் நிர்வாகிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
மேலும் இது ஒரு மசூதி என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அந்த காலத்தில் மசூதிகள் வெவ்வேறு பாணியில் கட்டப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது கோவில் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியதை அடுத்து, மூன்றாவது கூடுதல் சிவில் நீதிபதியும் ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றமும் முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலில் சீரமைப்புப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
விஎச்பியின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மங்களூர் எம்எல்ஏ யு டி காதர், இந்த விவகாரம் துணை ஆணையர் கேவி ராஜேந்திராவின் முன் உள்ளது, அவர் உடனடியாக ஆவணங்களை சரிபார்த்து நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.