கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். காங்கிரஸ் ஆட்சியின் போது பரகுரு ராமச்சந்திரப்பா தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவால் இக்கவிதை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பாடநூல் திருத்தக் குழு இந்தப் பாடப்புத்தகத்தைத் சீராய்வு செய்யவில்லை. பாடப்புத்தகத்தின் “நலி-கலி” பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பல இந்துக்கள் சூரியனையும் சந்திரனையும் புனிதமாகக் கருதுகின்றனர்.
“மத மடங்கள் ஏமாற்றும் பொறிகள்” , “கடவுளின் ‘ஆத்மாவை’ யாரும் பார்த்ததில்லை”, “சாஸ்திரங்களும் புராணங்களும் பொய்களின் மூட்டை” , “அரண்மனையும் குருவின் இருப்பிடமும் ஒரு பொறியே” என்ற வரிகள் கவிதையில் உள்ளன.
பெரும் பின்னடைவுக்குப் பிறகு ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் சீராய்வு செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்களை மறு சீராய்வு செய்வதாக பாஜக மாநில அரசு அறிவித்துள்ளது. கன்னட பாடப்புத்தகங்கள் (1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) ஆகியவற்றை இக்குழு சீராய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.