பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவின் தேவநஹள்ளியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள 12 அடி நீளமுள்ள இயேசு கிறிஸ்து சிலையும், 14 சிலுவைகளையும் தகர்த்தெறிய பட்டுள்ளது. இது குறித்து தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துத்துவ அமைப்புகள் அராஜகம்:
பிப்ரவரி 23 அன்று இந்துத்துவ அமைப்புகளான பஜ்ரங் தாள் மற்றும் இந்து ரக்ஷனா வேதிகே பல ஆண்டுகளாக கிறிஸ்துவர்கள் வழிபட்டு வரும் இடத்திற்கு சென்று கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பிரச்னை செய்துள்ளனர், மேலும் சிலையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் உளூர் நகராட்சி சிலையை இடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க போலீஸ் பாதுகாவலோடு சிலை உடைக்கப்பட்டது.
“நாங்கள் சுமார் 20 ஆண்டுகளாக இந்த இடத்தில் பிரார்த்தனை செய்து வருகிறோம் (அப்போதய காங்கிரஸ் தலைமையிலான) மாநில அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு இன்நிலத்தை இலவசமாக வழங்கியது,” பாஸ்டர் மேத்யூ கோட்டாயில் கூறுகிறார்.
வெளியாட்கள் தான் பிரச்னை செய்தனர்:
“அதிகாரிகள் எந்த வித முன்னறிவிப்புமின்றி திடீரென வந்து பல ஆண்டுகளாக நாங்கள் கட்டிய அனைத்தையும் உடைத்தெறிந்தனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நிலத்தை மீட்டெடுக்க நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளோம். யாருடனும் எந்தவொரு மோதலையும் நாங்கள் விரும்பவில்லை என்பதால், எங்களுடைய நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்குமாறு முறையீடு செய்து மாநில அரசாங்கத்தை அணுகவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் ” என்கிறார் மேத்யூ.
நாங்கள் கட்டாய மதமாற்றத்தால் ஈடுபடவில்லை. உள்ளூர் மக்கள் எப்போதும் எங்களுடன் ஒத்துழைத்துள்ளனர், எங்கள் மத விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்கிறார் மேத்யூ.
பேராயர் கருத்து:
பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் ” சமூகங்களுக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு.இந்திய அரசியலமைப்பால் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்தை மீறும் செயல்” என கூறியுள்ளார்.
மேலும் பலவந்தமாக மதமாற்றத்தால் ஈடுபடுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அரசாங்கம் விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் சில குழுக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கிறிஸ்தவர்களின் மதக் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் தேவையின்றி தலையிடுவது அரசாங்கத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் நன்மைபயக்காது எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
சிலுவைகள் மற்றும் சிலையை அகற்றுவது தொடர்பாக தேவநஹள்ளி தஹசில்தார் அஜித் குமார் ராயை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.