நீதிபதி அகில் அப்துல் ஹமீது குரேஷி அவர்கள் தற்போது திரிபுரா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டிய இவரை திட்டமிட்டு பழிவாங்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது என்பது விமர்சனம்.
பின்னணிக் காரணம் ?:
அகில் அப்துல் ஹமீது குரேஷி குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, 2010-ல் நாடறிந்த “சொராப்தீன் போலி என்கவுண்டர்” வழக்கில் அமீத்ஷாக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால், அமீத்ஷாவை “போலீஸ் கஸ்டடி”க்கு அனுப்பினார்.
அதன் பிறகு உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குரேஷியை பதவி உயர்வில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் நிலை வந்தது. ஆனால், அவரைப் பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு தலையிட்டு, மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய உயர்நீதிமன்றங்களில் அவர் நியமிக்கப்படக் கூடாது எனத் தடுத்தது.
அதன் பிறகு, கொலீஜியத்தின் அப்போதைய தலைவராக இருந்த நீதிபதி ரஞ்சன் கோகோய், மத்திய பாஜக அரசுடன் இணங்கி பேச்சுவார்த்தை நடத்தி , ஒப்பீட்டளவில் மிகச் சிறிய திரிபுரா உயர்நீதிமன்றத்தில் குரேஷி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2019 நவம்பர் 16-ல் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல்ஹமீது குரேஷி அவர்கள், 2022 மார்ச் 6ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.
குரேஷிக்கு இழைக்கப்படும் அநீதி?:
தற்போதைய நெறிமுறை (Protocol) படி, குரேஷி அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், மீண்டும் அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளை “கொலீஜியம்” மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் நடைமுறையை நீதிபதி குரேஷி ஓய்வு பெறும் வரை தாமதிப்பது, அல்லது அவரைத் தவிர்த்து விட்டு பிற நீதிபதிகளை நியமிப்பது என்ற ரீதியில் திட்டமிடப்படுவதாகவும், ஆனால், கொலீஜியத்தில் உள்ள மனசாட்சியுள்ள ஒரு நீதிபதி இதை எதிர்த்து நீதிபதி குரேஷிக்கு முறைப்படி முன்னுரிமை வழங்கப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பெயர் குறிப்படப்படாத அந்த கொலீஜியம் நீதிபதி இவ்வருட இறுதியில் ஓய்வு பெற இருப்பதால், அதுவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை ஒத்திவைத்து, அதன் பிறகு குரேஷியைத் தவிர்த்து பிற நீதிபதிகளை நியமிக்க திட்டமிடப்படுவதாகவும் தெரியவருகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ள நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது.
திறமையான நீதிபதி குரேஷி அவர்கள் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமிக்கப்பட்டால் நீதித்துறைக்கு நல்லது; அல்லது மத்திய ஆட்சியாளர்களால் பழிவாங்கப்பட்டால் அது நீதித்துறைக்கே இழப்பு என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.