Amit Shah Indian Judiciary

நீதிபதி லோயா: “ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து விவசாயம் செய்வேனே தவிர தவறான தீர்ப்பு வழங்கமாட்டேன்”- இறப்பதற்கு முன்பு லோயா நண்பரிடம் கூறியவை !

தவறான தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக., வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய விரும்புகிறேன் –  இறப்பதற்கு முன்பு தனது கல்லூரி நண்பரிடம் மனமுடைந்து பேசிய நீதிபதி லோயா!

நவம்பர் 27ம் தேதி அன்று லாத்தூர் பார் கவுன்சில் உறுப்பினர்கள் லாத்துர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு லாத்துர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் நீதிபதி லோயா வின் மரணத்தில் முறையான நீதி விசாரணை கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த பேரணியில் பங்கெடுத்ததவரும், நீதிபதி லோயாவின் கல்லூரி நண்பருமான உதய் க்வாரே “தி காரவான்” ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். உதய் க்வாரே ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் லாத்துர் பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர்.

மறைந்த நீதிபதியின் பேட்ச்மேட்டும், மூத்த வழக்கறிஞரும், பார் அசோசியேஷனின் முன்னாள் தலைவருமான உதய் கவேர்.

நீதிபதி லோயா  சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கினை விசாரிக்க தலைமையேற்றதிலிருந்து தனக்கு ஏராளமான அரசியல் அழுத்தங்கள் வருவதாக தன்னிடம் பகிர்ந்து கொண்டதை உதய் க்வாரே நினைவு கூர்ந்தார். எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயாவை முதல் முறையாக மிகுந்த பதற்றத்தில் இருப்பதை கண்டேன்.

மறைந்த நீதிபதி லோயா லாத்தூரைச் சார்ந்தவர். லாத்தூர் பார் கவுன்சிலில் உறுப்பினர். நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு லாத்தூரிலேயே வழக்கறிஞராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிவர். லோயா நீதிபதியான பின் நீதிமன்ற விடுமுறை நாட்களில் லாத்தூருக்கு வந்து பார் கவுன்சிலில் உள்ள தனது பழைய சகாக்களோடு விவாதிப்பார்.

2014 ம் ஆண்டு தீபாவளி விடுமுறையின் போது லாத்தூர் வந்திருந்தார். சொஹ்ராபுதீன் வழக்கில்தான் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவித்தார். அவர் ஒன்றை எங்களிடம் அழுத்தமாக கூறினார். அது என்னவெனில் ” என்னால் ஒருபோதும் தவறான தீர்ப்பை வழங்க முடியாது. அதற்கு பதிலாக  நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன். ” என்று சொன்னார்.

நீதிபதி லோயாவோடு அதிக நெருக்கத்தில் இருந்த மற்றொரு நண்பரைப் பற்றி தெரிந்துகொள்ள காரவான் நிருபர்கள் முயற்சித்தனர். அவரை சந்தித்து பேசினர். “நீதிபதி லோயா இறப்பதற்கு முன்பு நிறைய அழுத்தங்களோடு இருந்தார் என்பதை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அதை நான் விசாரணை அதிகாரி முன்பு மட்டுமே சொல்வேன்” என முடித்துக் கொண்டார்.

நவம்பர் 25ம் தேதி லாத்தூர் பார் கவுன்சிலின் பொதுக்குழு கூடி ஒருமனதாக நீதிபதி லோயாவின் மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான சூழலை விசாரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் விசாரணையை தன்னிச்சையான  உயர்நீதிமன்ற/உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழு மேற்றகொள்ள வேண்டுமெனவும் அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. லாத்தூர் பார் கவுன்சிலின் பொதுக்குழுவுக்கு பின்னர் தான் குடியரசு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கிய பேரணி நடைபெற்றது.

நீதிபதி லோயாவின் மரணத்தை சுற்றியுள்ள சந்தேகம் என்பது ஒட்டுமொத்த நீதித்துறைக்கு ஆரோக்கியமான சூழல் அல்ல எனவும் பார் கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடைமுறையின் ஒருபகுதியாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டுமென நாங்கள் கோருகிறோம். ஏனெனில் லோயா மரணம் இயற்கைக்கு மாற்றமானது மேலும் அவர் இறக்கும் தருவாயில் பணிச்சூழலின் காரணமாக அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கிறார் என்றும் பார் கவுன்சிலின் பொதுக்குழு முடிவெடுத்திருக்கிறது.

Image Credit:Gettyimages

நீதிபதி லோயாவின் மரணத்தில் அவரது குடும்பத்தினரின் சந்தேகமும், கவலையும் குறித்து காரவானில் நிரஞ்சன் தக்லே எழுதிய கட்டுரைக்கு பின்னர் இந்த பார்கவுன்சிலின் பேரணி நடந்துள்ளது. இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும்., சட்டத்துறையின் உள்ள சகோதரத்துவ அமைப்புகளின் கூட்டு முயற்சிதான் இந்த அணிவகுப்பு எனவும் லாத்தூர் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

லாத்தூர் பார் கவுன்சில் தீர்மானங்கள் அடங்கியை அறிக்கையின் நகலை வெறுமென குடியரசு தலைவருக்கு மட்டும் அனுப்பவில்லை., மாறாக இந்தியாவின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கும் அனுப்பியிருக்கிறது.

லாத்தூர் பார் கவுன்சிலின் தலைவர் பாடீல் கூறும்பொழுது சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முறையான நீதியை பெற்றுத் தர வேண்டும் இல்லையேல் நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். மேலும் விசாரணையின் போக்கில் நியாயமானதாக இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம் என்றார். பார் கவுன்சிலின் தீர்மானங்களை பற்றி உதய் க்வாரே கூறும்பொழுது லோயாவின் மரணத்தில் முறையான , வெளிப்படையான நீதி விசாரணை வேண்டும் நாங்கள் யாரையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை. ஆணையமே சுதந்திரமாக விசாரிக்கட்டும் என்றார்.

நீதிபதி லோயாவின் மகன் அனுஜ் தனது தந்தை மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார். மேலும் தனது தந்தையுடன் இருந்த நீதித்துறை அமைப்பினர் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நவம்பர் 29 அன்று லாத்தூர் பார் கவுன்சில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் அனுஜ் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நீதிபதி லோயா மரணித்த போது அவரது மகன் அனுஜ் சம்பவ இடத்திலேயே இல்லை , மரணம் குறித்தான கேள்விகளுக்கு அவரிடம் எந்த பதிலும் இருக்கப்போவதில்லை.

மரணம் தொடர்பான நியாயமான விசாரணை தொடங்கினால் லோயாவின் குடும்ப உறுப்பினர்கள் பல வகையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் , மேலும் விசாரணையை நிறுத்துவதற்கு பல அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற பயத்தின் காரணமாக அனுஜ்  இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுஜின் அறிக்கை பற்றி நீதிபதி லோயாவின் நண்பர் உதய் க்வாரே கூறுகையில் “அனுஜ் இப்போது தனியாக இருக்கிறார். அவர் இன்னும் தனது மீது வாழ்க்கையை வாழ வேண்டும்., அவரது தாயும் தனது மீதி வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்த தந்தை இப்போது இல்லை. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாத எட்டுக்களிலும் வஞ்சகம் இருந்தால், குண்டர்கள் காத்துக் கொண்டிருந்தால் அவர் என்ன செய்வார்..? எனக்கும் என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை..என்னை விட்டுவிடுங்கள் ., வாழ விடுங்கள். இதைத்தான் அவர் தலைமை நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.

Courtesy:CaravanMagazine