பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார்
உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்:
ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட
சிவில் நீதிபதி விஜய் குப்தா, மஸ்ஜித் இன்தெஜாமியா நிர்வாக குழு, உ.பி. சன்னி வக்ஃப் வாரியம், உ.பி. தொல்லியல் துறை, இந்திய ஒன்றியம் மற்றும் உ.பி. அரசாங்கம் புடாவுன் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாநில தலைமைச் செயலாளர் வழியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
வரலாற்று ஞானமில்லாத இந்துத்துவாவினர்:
மசூதி தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் இஸ்ரார் அகமது, மசூதியின் கீழ் எந்தக் கோயிலும் இல்லை என்று கூறினார்.
“அவர்கள் (மசூதி தரப்பு) இந்த மனு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்தது இல்லை, என்று பூர்வாங்க வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த மசூதி ஷம்சுதீன் அல்துத்மிஷ் என்பவரால் கட்டப்பட்டது. ஆனால் இந்த மசூதி முகலாய படையெடுப்பாளரால் கட்டப்பட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர். முகலாய ஆட்சியாளர்களுக்கும், அடிமை வம்சத்துக்கும் (slave dynasty) உள்ள வித்தியாசம் என்ன என்ற வரலாறு கூட இவர்களுக்கு தெரியவில்லை.” என இஸ்ரார் கூறினார்.
மிக பெரும் பள்ளிவாசல்:
மௌலவி தோலா பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசல், ஒரே நேரத்தில் 23,000 நபர்களை கொள்ளும் அளவிற்கு, நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.
“மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேத் பிரகாஷ் சாஹு, இது ஜமா மசூதியின் கட்டிடம் அல்ல, நீலகண்ட மகாதேவ் மகாராஜின் பழமையான இஷான் கோயில் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.”
மனுதாரர்கள்:
மனுதாரர்கள் அகில பாரத இந்து மகாசபாவின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகேஷ் படேல், வழக்கறிஞர் அரவிந்த் பர்மர், கியான் பிரகாஷ், அனுராக் சர்மா மற்றும் உமேஷ் சந்திர சர்மா.
இவர்கள் தான் பள்ளிவாசலை நீலகண்ட மகாதேவ் கோயில் எனக் கூறுபவர்கள்.
இந்த பள்ளிவாசலை நீலகண்ட மகாதேவ் கோவில் என்று சில புத்தகங்கள் குறிப்பிட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
“சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் நீலகண்ட மகாதேவ் கோவிலில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாக இந்து தரப்பு வழக்கறிஞர் பர்மர் கூறினார். மேலும், வழிபாட்டின் போது ஆட்சேபனை, தகராறு அல்லது குறுக்கீடு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.”
பள்ளிவாசலை அபகரிக்க திட்டமா? :
“பழமையான கோவில் தொடர்பான பொருட்கள் நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பதை நாங்கள் அறிவோம். எனவே வழக்கு பதிவு செய்து, உண்மையை வெளிக்கொணர ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு நாங்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தோம்,” என்று முகேஷ் சிங் படேல் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாற்றாசிரியரின் கருத்து:
செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்றாசிரியரான முஜாஹித் நாஸ், அது (மசூதி) ஒருபோதும் சிவன் கோவிலாக இருந்ததில்லை, இன்றும் இல்லை, நாளையும் இருக்காது என்றார்.
“இந்த அற்புதமான கட்டிடம் அல்துத்மிஷ் மன்னர் தனது மகள் ரசியா சுல்தானாவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கட்டியது, இங்குள்ள கல்லறை இந்தியாவிலேயே மிகப் பெரியது” என்றார் முஜாஹித்.
இது பள்ளிவாசல் தான் என்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது. 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை தீவிரமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்படுகிறது. அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்தக் கூற்றுக்கள் கூறப்படுகின்றன. இதில் உண்மை இல்லை, என்றார்.