International News Palestine

போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியரை சுட்டு கொன்ற இஸ்ரேல் !

கடந்த மார்ச் 2018 இல் தொடங்கிய வாராந்திர ஆர்ப்பாட்டங்களின் தொடரான ​​”கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்னில்” பங்கேற்க ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் பிரிக்கும்  வேலி அருகே கூடினர். அப்போது இஸ்ரேலிய அராஜகத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் ஒருவரை சுட்டு கொன்றுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை. போராட்டக்கார்களின் மீதான இந்த தாக்குதலின் போது 54 பாலஸ்தீனியர்கள்  படுகாயம் அடைந்தனர்.அவர்களில், 22 பேர் துப்பாக்கி தோட்டாக்களால் காயம் அடைந்துள்ளனர்.

வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அலா நிசார் ஹம்தான் (28) என்பவரை தான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் மார்பில் சுட்டுக் கொன்றதாக காசாவில் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் கடந்த வெள்ளிக்கிழமை(4-10-19)  அன்று தெரிவித்துள்ளார்,.

இஸ்ரேலிய இராணுவம் இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, எனினும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் ‘சுமார் 5,800 பாலஸ்தீனிய “கலகக்காரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்” வேலியின் பல இடங்களில் கூடியிருந்தனர், சில கற்களையும் வெடிக்கும் சாதனங்களையும் வீரர்களை நோக்கி வீசினர்” என்று தெரிவித்துளளது. எனினும் காயமடைந்த வீரர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

காசா பேரணிகள் தொடங்கியதிலிருந்து, இதுவரை 313 பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய படைகள்  கொன்று குவிந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்  என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

1948 இல் இஸ்ரேல் நிறுவப்பட்டபோது பல பாலஸ்தீனியர்களின் குடும்பங்கள் வன்முறையில் வெளியேற்றப்பட்டன. அந்த  நிலங்களுக்குத் திரும்புவதற்கான உரிமையை பாலஸ்தீனியர்கள் கோருகின்றனர். எனினும் அத்தகைய எந்தவொரு திரும்புதலும் இஸ்ரேலிய  யூத அரசுக்கு ஒரு முடிவு காட்டுவதாக அமைந்து விடும் என்று இஸ்ரேல் கூறி அவர்களின் உரிமையை மறுத்து வருகிறது 

Photo credit: Al Jazeera