Hindutva Indian Judiciary

இந்திய காவல்துறையின் மனநிலை என்ன? அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு !

21 மாநிலங்களைச் சேர்ந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர்.

*****

“இந்தியாவில் காவல்துறை ஆதிக்கத்தின் நிலை – 2019” என்ற கருத்துக்கணிப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அக்கருத்துக் கணிப்பில் பெறப்பட்ட முடிவுகள் போலீசின் இன்றைய நிலைமையை சுட்டிக் காட்டுகின்றன. குற்றங்களைச் செய்வதற்கு முசுலீம்கள் இயற்கையாகவே ஆட்படக் கூடியவர்கள் என்ற கருத்து இரண்டில் ஒரு போலீசுக்கு இருக்கிறது.

போலீசுக்குரிய பண்பு மற்றும் வேலை நிலைமைகளைப் பற்றி பொதுவான நோக்கம் (Common Cause) என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் வளரும் சமூகங்கள் குறித்த ஆய்வுக்கான மையத்தின் – லோக்நிதி திட்டம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன.

21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரால் வெளியிடப்பட்டன.

இதில் வெளியாகியிருக்கும் முடிவுகள் போலீசின் மனநிலையை படம்பிடித்துக் காட்டக் கூடியவையாக இருக்கின்றன. முஸ்லிம்கள் இயற்கையாகவே குற்றங்களைச் செய்யக்கூடிய தன்மைகொண்டவர்கள் என சுமார் 50% போலீசார் நினைக்கின்றனர். பசுவைக் கொல்லும் ‘குற்றவாளிகள்’ கும்பல் படுகொலை செய்யப்படுவது இயற்கையானதே என்று சுமார் 35% போலீசார் நினைக்கின்றனர்.

முஸ்லிம்கள் வெறும் விசாரணைக் கைதியாகவே பல ஆண்டுகாலம் சிறையில் வாடி, பின்னர் ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுகின்றனர். இதற்கு 50% போலீசின் இந்த மோசமான மனநிலையே காரணம் என்பது கண்கூடு. இத்தகையதொரு கருத்தியலை இந்துத்துவக் கும்பல் பல் ஆண்டுகாலமாக திட்டமிட்டு பரப்பிவருவது போலீசு மத்தியில் வேலை செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் போலீசு மத்தியில் பெருவாரியாக நிலவும் முசுலீம் வெறுப்பு.

அதே போல வட இந்தியாவில் பசுவை புனிதமாகக் கருதும் இந்துத்துவக் கருத்தின் ஆதிக்கம் சுமார் 35% போலீசை பசுக் குண்டர்களின் கொலைகளை இயற்கையானதாக பார்க்கச் செய்கிறது. அன்றாடம் ஒரு பாஜக பிரமுகரோ ஏதேனும் சங்கபரிவார சாமியாரோ பசுக் குண்டர்களை ஆதரித்து அறிக்கை கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். பின்னர் அடிமைப் போலீசின் சிந்தனை மட்டும் வேறெப்படிப் போகும் ?

மேலும் இந்த கருத்துக் கணிப்பின்படி, பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை ஒரு கும்பல் தண்டிப்பது இயற்கையானதே என்று சுமார் 43% பேர் நினைக்கின்றனர். செல்வாக்கு படைத்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் அரசியல் அழுத்தங்களை சுமார் 72% பேர் சந்தித்துள்ளனர். அதே போல சிறு சிறு குற்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரத்தை நீதிமன்ற விசாரணைக்குப் பதிலாக போலீசுக்கே வழங்க வேண்டும் என்று சுமார் 37% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அனைத்து அதிகாரத்தையும் தங்களது கைகளில் குவித்துக் கொண்டு அரசியல்வாதிகளோடு பகிரங்க உறவு வைத்துக் கொண்டு மக்களை ஒடுக்கி வருவது இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போதே சிறு சிறு தவறு செய்பவர்களின் கை, கால்களை முறித்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறி; கேட்போரை பைத்தியக்காரனாக நினைக்கும் போலீசுக்கு சிறு சிறு குற்றங்களைத் தாமே தண்டிக்கும் அதிகாரம் வேண்டுமாம். சட்டவிரோதமாக செய்துவரும் அயோக்கியத்தனங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்கிறது போலீசு கும்பல்.

பாசிஸ்டுகளின் ஆட்சியின் கீழ், ‘நீதித்துறை நலன் கருதி’ போலீசுக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எச்சரிக்கை !

– நந்தன், வினவு,
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.