சிரியா நாட்டில் உள்நாட்டு போர் , வன்முறைகள், உள்நாட்டு குழப்பம் என தொடர்வதால், அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கடும் ஏழ்மையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா சிரியாவிற்கு 2,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது.
சிரியா நாடு, இந்திய அரசிடம், அவசரகால மனிதாபிமான உதவி கோரியதன் அடிப்படையில் இந்த அரிசி வழங்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1000 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது:
சிரியாவின் உள்ளூர் நிர்வாக அமைச்சரும், உச்ச நிவாரணக் குழுவின் தலைவருமான ஹுசைன் மக்லூஃபியிடம் , கடந்த வியாழக்கிழமை லத்தாக்கியா துறைமுகத்தில் 1,000 டன் அரிசியை இந்திய தூதர் ஹிஃப்ஸூர் ரஹ்மான் வழங்கினார்.
முன்னதாக, கோவிட் -19 உதவியின் ஒரு பகுதியாக இந்தியா கடந்த ஜூலை மாதம் 10 டன் மருந்துகளை சிரியாவிற்கு வழங்கியிருந்தது.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:
2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டுகளில், “ஸ்டடி இன் இந்தியா”திட்டத்தின் கீழ் இந்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைத் தொடர சிரிய மாணவர்களுக்கு மொத்தம் 1,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
டமாஸ்கஸில் “நெக்ஸ்ட்ஜென் தகவல் தொழில்நுட்ப மையத்தை” இந்திய நிறுவ உள்ளது, அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிரியாவின் 17.5 மில்லியன் மக்கள்தொகையில் 80% தற்போது வறுமையில் வாழ்கிறார்கள் என்று ஐ.நா மதிப்பிடுகிறது.